Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்தியா 'அவுட்' ஆக டோணி தான் காரணம்-முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு

Posted by:
Updated: Thursday, October 4, 2012, 14:51 [IST]
 

இந்தியா 'அவுட்' ஆக டோணி தான் காரணம்-முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு
 

கொழும்பு: இலங்கையில் நடைபெற்று வரும் டுவென்டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர்-8 சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது. இதற்கு இந்திய அணியின் கேப்டன் டோணியின் தவறான முடிவுகள் தான் காரணம் என்று முன்னாள் இந்திய வீரர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட இந்திய அணி, லீக் போட்டிகளில் சிறப்பாக ஆடி, சூப்பர்-8 சுற்றிற்கு முன்னேறியது. ஆனால் சூப்பர்-8 சுற்றில் சொதப்பிய இந்தியா, 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும், அரையிறுதி போட்டிக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்தே வெளியேறியது.

கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் டுவென்டி20 உலக கோப்பை தொடரில் சாம்பியனான இந்தியா, அதன்பிறகு தொடர்ந்து 3வது முறையாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை கோட்டைவிட்டுள்ளது. இந்திய ஆடுகளங்களை ஒத்துள்ள இலங்கை ஆடுகளங்களில் இந்திய அணியினால் சாதிக்க முடியாமல் போனதற்கு, கேப்டன் டோணி எடுத்த சில தவறான முடிவுகளே காரணம் என்று முன்னாள் இந்திய வீரர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

இது குறித்து முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் கூறியதாவது,

டுவென்டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த அணியாக இருந்த இந்தியா, தற்போது அப்போட்டிகளில் வெற்றி பெற திணறி வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு டுவென்டி20 உலக கோப்பையும், கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலக கோப்பையை வென்றோம்.ஆனால் அதன்பிறகு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற இந்தியா திணறி வருகிறது. இது குறித்து நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. இந்திய அணியின் தோல்விகளுக்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

இதற்காக தோல்விக்கான காரணத்தை ஒரு அறிக்கையாக தயாரித்து, பயிற்சியாளர், கேப்டன் ஆகியோரை மற்ற வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் தோல்விக்கு அவர்கள் காரணம் என்று தெரியவந்தால், மாற்றுவதில் தவறில்லை.

ஒரு அணியின் தோல்விக்கு கேப்டனும், பயிற்சியாளரும் மட்டுமே பொறுப்பேற்க முடியாது. எந்த கேப்டனும் ஒரு தவறான முடிவு எடுத்து தனக்கு தானே சிக்கலை ஏற்படுத்தி கொள்ளமாட்டான். சில நேரங்களில் கேப்டனின் முடிவு பலன் அளிக்கலாம். ஆனால் சில நேரங்களில் தோல்வியும் அடையலாம் என்றார்.

இது குறித்து முன்னாள் இந்திய அணியின் துவக்க வீரர் சேத்தன் சவுகன் கூறியதாவது,

இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் டோணி தான் பொறுப்பேற்க வேண்டும். என்னை பொறுத்த வரை டுவென்டி20 போட்டிகளில் ஜாகிர்கானுக்கு வாய்ப்பு அளிக்க கூடாது. துணை கண்டத்தில் நடைபெறும் இந்த தொடரில், இந்தியாவில் உள்ள அதே சூழ்நிலை தான் இலங்கையிலும் இருந்தது.

இலங்கைக்கு எதிரான போட்டிகளில் இந்தியா சிறப்பாக ஆடியுள்ளது. அதை கருத்தில் கொண்டு நாம் அரையிறுதிக்கு முன்னேறி இருக்க வேண்டும். ஆனால் இந்திய அணி அப்படி செய்யவில்லை.

ஒரு அணியின் கேப்டன் என்ற நிலையில், அணியின் தோல்விக்கு டோணி பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அவரை மட்டுமே முழுமையாக குற்றச்சாட்ட முடியாது ஏனெனில் அணியில் உள்ள வீரர்களும், அதற்கு காரணமாக உள்ளனர். ஒரு அணியின் கேப்டன் சிறப்பாக செயல்பட்டால், அந்த அணியும் சிறப்பாக செயல்படும். கேப்டன் சொதப்பினால், அணியின் தோல்வியை தவிர்க்க முடியாது.

டோணி தனது முடிவுகளால் ஏற்பட்ட தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷேவாக்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது தேவையில்லாத ஒன்று.

ரோஹித் சர்மா சமீபகாலமாக பொறுப்பாக ஆடுவதில்லை. விராத் கோஹ்லியும், சுரேஷ் ரெய்னாவும் சில போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். ஆனால் ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், டோணி ஆகிய 3 பேரும் பேட்டிங்கில் சொதப்பினர். அணிக்கு வெற்றியை பெற்று தர ஸ்கோர் இல்லாத நிலையில் பந்துவீச்சாளர்கள் என்ன செய்ய முடியும்.

பந்துவீச்சை பொறுத்தவரை ஜாகிர்கான் திணறுகிறார். அவரை விட இளம்வீரர் அசோக் டின்டா சிறப்பாக பந்துவீசுகிறார். ஜாகிர்கான் பந்துவீசுவதில் மட்டுமல்ல, பீல்டிங்கில் கூட தவறுகளை செய்கிறார் என்றார்.

இது குறித்து முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்ளே கூறியதாவது,

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 122 ரன்களை வைத்து கொண்டு கடைசி நேரத்தில் அஸ்வினுக்கு பந்துவீச வாய்ப்பு அளிக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. வெற்றிக்கு 25 ரன்கள் மட்டுமே உள்ள நிலையில் சுழல்பந்துவீச்சுக்கு, டோணி வாய்ப்பு கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் முதல் 5 பேட்ஸ்மேன்களில், ஒருவராவது அதிரடியாக ஆட வேண்டும். விராத் கோஹ்லியின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அதற்கேற்ப அவர் ஆடுவதில்லை. ஷேவாக் பார்மில் இல்லை. இந் நிலையில் டுவென்டி20 போட்டிகளில் அதிரடியாக ரன் சேர்ப்பது எப்படி? என்றார்.

முன்னாள் சுழல்பந்துவீச்சாளர் முரளி கார்த்திக் கூறியதாவது,

கட்டாய வெற்றியை நோக்கியுள்ள நிலையில் கேப்டன் டோணி, சற்று முன்னதாக களமிறங்கி அதிரடியாக ரன்களை குவிக்க வேண்டும். ஆனால் டோணி கடைசி கட்டத்தில் வந்து சொதப்பிலாக ஆடுகிறார். டோணி முன்னதாக வந்திருந்தால், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அதிக ஸ்கோரை எட்டி, அரையிறுதிக்கு முன்னேறி இருக்கலாம் என்றார்.

இலங்கை ஆடுகளங்களில் நன்கு பழக்கமுள்ள இந்திய அணி, உலக கோப்பையுடன் நாடு திரும்பும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் அரையிறுதி போட்டிக்கு கூட முன்னேற முடியாமல் இந்திய அணி நாடு திரும்பி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே கேப்டன் டோணி தன் மீதான குற்றச்சாட்டுகளை மனதில் வைத்து இனி வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு வெற்றி பெற்ற தர வேண்டும். இல்லையெனில் அவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published:  Thursday, October 4, 2012, 12:54 [IST]
English summary
Mahendra Singh Dhoni's "tactical errors" and the poor form of some senior players were the main reasons for India's early exit from the World Twenty20, according to former cricketers.
கருத்தை எழுதுங்கள்