Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்திய அணியின் தேர்வு சரியில்லை-இளம்வீரர்கள் இல்லாதது தோல்விக்கு காரணம்: வாசிம் அக்ரம்

Posted by:
Published: Thursday, October 4, 2012, 18:34 [IST]
 

இந்திய அணியின் தேர்வு சரியில்லை-இளம்வீரர்கள் இல்லாதது தோல்விக்கு காரணம்: வாசிம் அக்ரம்
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர்-8 சுற்றுடன் வெளியேற, கேப்டன் டோணியின் தேர்வு முறை தான் காரணம். இந்திய அணியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்காததால், தோல்வியை சந்தித்ததாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் குற்றச்சாட்டி உள்ளார்.

இலங்கையில் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர்-8 சுற்று வரை முன்னேறிய இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு, கேப்டன் டோணியின் தேர்வு முறை தான் காரணம் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்ட 11 வீரர்களை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். உலக கோப்பை தொடரில் இந்திய கேப்டன் டோணி, வீரர்களை தேர்வு செய்த முறை சரியில்லை. எடுத்துக்காட்டாக, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்தும் திறமை கொண்ட ஹர்பஜன் சிங்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு தோல்விக்கு பிறகும் ஒரு பாடம் கற்று கொள்ள வேண்டும். இந்திய அணியை பொறுத்த வரை பந்துவீச்சிலும், டாப் ஆடர் பேட்டிங் வரிசையிலும் குறைபாடு இருப்பது தெளிவாக தெரிகிறது. ஒரு அணி என்பது எல்லா பகுதிகளிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டும், அது உலக தரம் வாய்ந்த சிறந்த அணியாக கருத முடியும்.

உலகிலேயே இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமானது. ஆனால் ஒவ்வொரு வெற்றிக்கும், பந்துவீச்சாளர்களான ஜாகிர்கானையும், பாலாஜியையும் எதிர்பார்த்தால் எப்படி? இதன்மூலம் அணியின் நிலையை நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் பாலாஜிக்கு கடைசி ஓவர் கொடுத்தது, அவரது மதிப்பை குறைக்கும் செயலாக கருதுகிறேன். ஏனெனில் நீண்டகால இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள ஒரு வீரருக்கு தன்னம்பிக்கை குறைவாக தான் இருக்கும்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா 1 ரன்னில் வெற்றி பெற்றதை ஒரு அதிஷ்ட நிகழ்வாக கருதுகிறேன். ஜாகிர்கானை பொறுத்த வரை 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் பங்கேற்க கூடாது. என்னை பொறுத்தவரை அவர் விரும்பும் ஏதாவது ஒரு வகை போட்டிளில் அதிக கவனம் செலுத்தலாம். ஜாகிர்கான் பந்துவீசும் போது வேகமாக ஓடி வந்து, பேட்ஸ்மேன்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதில்லை. எனவே விரைவில் இந்திய அணிக்கு ஒரு மாற்றுவீரரை கண்டறிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் உள்ளூரில் இந்திய அணி களமிறங்க உள்ள கிரிக்கெட் தொடரில், இளம் வேகப்பந்துவீச்சாளர் தேவைப்படுகிறார். இளம்வீரர்களான உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோர் அணியில் சேர்க்கப்படாமல் விட்டது ஏமாற்றம் அளிக்கிறது. உமேஷ் யாதவ் எங்கே? வருண் ஆரோனை மறந்தவர்கள் பட்டியலில் சேர்ந்துவி்ட்டார் என்று நினைக்கிறேன்.

தற்போது புதிய தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இளம்வீரர்களான உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட வேண்டும். வருண் ஆரோன் காயமடைந்துள்ள நிலையில், டுவென்டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்றார்.

English summary
Former Pakistan skipper, Wasim Akram criticized Team India skipper MS Dhoni's selection policy for the team's ouster from ICC World T20 in Sri Lanka.
கருத்தை எழுதுங்கள்