Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை: கிறிஸ்கெய்ல் அதிரடியில் பைனலுக்கு முன்னேறியது மேற்கிந்திய தீவுகள்

Posted by:
Published: Saturday, October 6, 2012, 15:24 [IST]
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி, நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு இமாலய ஸ்கோரை பெற்று தந்தார்.

டுவென்டி20 உலக கோப்பை: கிறிஸ்கெய்ல் அதிரடியில் பைனலுக்கு முன்னேறியது மேற்கிந்திய தீவுகள்

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. தொடரின் அரையறுதி போட்டிகள் முடிவடைந்து தற்போது இறுதிப் போட்டியை காண ரசிகர்கள் தயாராகி வருகிறது. நேற்று நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.

இரு அணிகளும் இறுதி போட்டிக்கு முன்னேறும் வகையில் அணியில் மாற்றம் செய்திருந்தன. ஆஸ்திரேலியா அணியில் கிளைன் மேக்ஸ்வெல் நீக்கப்பட்டு, டேவிட் ஹஸ்ஸி சேர்க்கப்பட்டிருந்தார். மேற்கிந்திய தீவுகள் அணியில் டேரன் பிராவே நீக்கப்பட்டு, அவரது சகோதரர் வெய்ன் பிராவோ சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் போட்டியின் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. துவக்க வீரர்களான கிறிஸ்கெய்லும், ஜான்சன் சார்லஸும் களமிறங்கினர். கிறிஸ்கெய்ல் வழக்கம் போல அதிரடி காட்ட, ஜான்சன் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

அடுத்து வந்த சாமுவேல்ஸ், கெய்லுடன் சேர்ந்து அதிரடியில் கலக்கினார். 20 பந்துகளில் 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்த சாமுவேல்ஸ் 26 ரன்களில் போல்டானார். அதிரடியாக ஆடி வந்த கிறிஸ்கெய்ல் 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவருக்கு வெய்ன் பிராவோ சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். 3 சிக்ஸ், 1 பவுண்டரி அடித்த பிராவோ 37 ரன்களில் வெளியேறினார்.

4 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் வந்த போல்லார்டு ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினார். கெய்ல் மறுமுனையில் கிடைத்த பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு அனுப்பினார். இதனால் மேற்கிந்திய தீவுகளின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. கடைசி ஓவரில் கெய்ல் ஒரு சிக்ஸ் அடிக்க, போல்லார்டு ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து தூள்கிளப்பினார்.

கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்ற போல்லார்டு, பவுண்டரி லைனில் கேட்சாகி வெளியேறினார். 15 பந்துகளில் 3 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 38 ரன்கள் எடுத்திருந்தார் போல்லார்டு. கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த கிறிஸ்கெய்ல் 41 பந்துகளில் 6 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்து 75 ரன்கள் குவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்களை இழந்து 205 ரன்களை குவித்தது. டுவென்டி20 உலக கோப்பை 2012ல் 200 ரன்களை கடந்த முதல் அணி மேற்கிந்திய தீவுகள் ஆகும்.

இந்த நிலையில் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஆனால் துவக்க வீரர் டேவிட் வார்னர் 1 ரன்னில் ஏமாற்றினார். சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடிய மைக்கேல் ஹஸ்ஸியும் 18 ரன்களில் வெளியேறினார்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷேன் வாட்சன் 7 ரன்களிலும் அவுட்டாகினர். கேமரூன் வையிட் 5 ரன்களில் திருப்திபட்டு கொண்டார். கேப்டன் ஜார்ஜ் பெய்லி மட்டும் ஒரு முனையில் நின்று ஆடி அணியை மீட்க முயன்றார். அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த அவரும் 29 பந்துகளில் 4 சிக்ஸ், 6 பவுண்டரிகள் அடித்து 63 ரன்களை குவித்து அவுட்டானார்.

அடுத்து வந்த யாரும் சொல்லும் அளவிற்கு ஆடவில்லை. இதனால் 16.4 ஓவர்களில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 131 ரன்களை எடுத்தது. இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்துவீசிய ரவிராம்பால் 3 விக்கெட்களும், சாமுவேல் பத்ரி, சுனில் நரேன், போல்லார்டு ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். அதிரடியாக ஆடி மேற்கிந்திய தீவுகளின் வெற்றிக்கு உதவிய கிறிஸ் கெய்ல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள், டுவென்டி20 உலக கோப்பை தொடரில் முதன் முதலாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் சொந்த மண்ணில் களமிறங்க உள்ள இலங்கையை, மேற்கிந்திய தீவுகள் எதிர்கொள்ள உள்ளது.

English summary
Chris Gayle and Kieron Pollard lit up the World Twenty20 with scintillating power-hitting as West Indies reached into the final of the tournament crushing Australia by 74 runs in a lop-sided semi-final.
கருத்தை எழுதுங்கள்