Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

பாகிஸ்தான் அணியை குறித்து சர்ச்சைக்குரிய டுவிட்டர் செய்தி: சிக்கலில் சுரேஷ் ரெய்னா?

Posted by:
Published: Saturday, October 6, 2012, 18:08 [IST]
 

மும்பை: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி குறித்து சுரேஷ் ரெய்னா, டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்ட தகவலால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. தொடரின் சூப்பர்-8 சுற்றில் 2 வெற்றிகளை பெற்ற இந்திய அணி, ரன் ரேட் அடிப்படையில் தொடரில் இருந்து வெளியேறியது.

ஆனால் பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி, இலங்கையிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இதனால் தொடரின் இறுதிப் போட்டியில் துணை கண்டத்தை சேர்ந்த இலங்கை அணி மட்டுமே முன்னேறியது.

இந்த நிலையில் இந்திய அணியின் மிடில் ஆடர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ள டுவிட்டர் தகவலால் சிக்கல் எழுந்துள்ளது. உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணியினர் நாடு திரும்பிய பிறகு, சுரேஷ் ரெய்னாவின் டுவிட்டர் இணையதள கணக்கில் இருந்து அந்த சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகி உள்ளது.

சுரேஷ் ரெய்னாவின் டுவிட்டர் கணக்கில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது,

பல நாட்களுக்கு பிறகு வீடு திரும்பி உள்ளேன். இனிவரும் சாம்பியன்ஸ் லீக் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட காத்திருக்க முடியவில்லை.

ஒரிரு நாட்கள் தாமதமாகிவிட்டது. அதுவும் வெட்கமில்லாத வகையில் வெளியேறிவிட்டது. பாய், பாய், பாகிஸ்தான் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த டுவிட்டர் தகவல் சில மணிநேரங்களில் சுரேஷ் ரெய்னாவின் கணக்கில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனது டுவிட்டர் கணக்கில் வெளியான செய்தியினால் யாருக்காவது துக்கம் ஏற்பட்டிருந்தால், மன்னிக்கவும் என்று சுரேஷ் ரெய்னா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஸ்மார்ட் போன்கள் மிகவும் ஆபத்தானவை. எனது உறவில் உள்ள ஒருவர், சர்ச்சைக்குரிய தகவலை டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு விளையாட்டு வீரரான நான் மற்ற வீரர்கள் அவமதிக்கும் செயலில் ஈடுபடமாட்டேன்.

சர்ச்சையை கிளப்பிய செய்தியை நான் அழித்துவிட்டாலும், அது குறித்து தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அதை கண்டு வருத்தப்பட்ட எல்லாரிடமும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். வெட்கப்படுத்தும் வகையிலான அந்த செய்தியை நான் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா மன்னிப்பு கேட்டாலும், அவரது டுவிட்டர் கணக்கில் வெளியான செய்தி பெரிய பிரச்சனை ஏற்படுத்துமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

English summary
India's Suresh Raina, disappointed with the team's ouster from World T20 as they failed to make it to the semi-finals of the mega event tweeted on his micro-blogging site in a controversial manner after Sri Lanka defeated the arch-rivals.
கருத்தை எழுதுங்கள்