Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை யாருக்கு?-இலங்கை, மேற்கிந்திய தீவுகள் இடையே மோதல்

Posted by:
Updated: Saturday, October 6, 2012, 17:25 [IST]
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை தொடர் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள மேற்கிந்திய தீவுகள், நாளை இலங்கையை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது. இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால், நாளைய போட்டி அதிக விறுவிறுப்பு கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டுவென்டி20 உலக கோப்பை யாருக்கு?-இலங்கை, மேற்கிந்திய தீவுகள் இடையே மோதல்

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கையில் நேற்று நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் முதல் முறையாக, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேபோல இந்த முறை சொந்த மண்ணில் களமிறங்கிய உள்ள இலங்கையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.

டுவென்டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நாளை களமிறங்க உள்ள மேற்கண்ட இரு அணிகளும் பலமிகுந்தவை. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என்ற எல்லா பகுதிகளிலும் இரு அணிகளும், உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ளன.

மேற்கிந்திய தீவுகள்:

மேற்கிந்திய தீவுகள் என்றாலே நினைவுக்கு வருவது அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் தான். அணியின் முக்கிய வீரரான இவர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கி வருகிறார். மேலும் சிலிப் பகுதியிலும் சிறப்பாக பீல்டிங் செய்து அணியின் ஆல் ரவுண்டராகவே வலம் வருகிறார். இவருக்கு துவக்க வீரர் ஜான்சன் சார்லஸ் சிறப்பான ஒத்துழைப்பு அளிக்கிறார்.

மேலும் ஆல் ரவுண்டர்களாக ஜொலிக்கும், சாமுவேல்ஸ், ஆன்ரூ ரஸசல், வெய்ன் பிராவோ ஆகியோர் அணியின் ஸ்கோரை உயர்த்த பக்கபலமாக உள்ளனர். மிடில் ஆடரில் எட்வார்டு பொறுப்பாக ஆடி ரன்களை சேர்க்கிறார்.

பந்துவீச்சை பொறுத்த வரை ரவிராம்பால் தொடரின் துவக்கம் முதலே விக்கெட்களை வீழ்த்துவதிலும், ரன்களை கட்டுப்படுத்துவதிலும் சிறந்து விளங்குகிறார். கேப்டன் சம்மி பொறுப்பாக பந்துவீசுகிறார். சுழலில் கலக்கும் சுனில் நரேன், எதிரணியினரை திணறடிக்கிறார்.

இலங்கை:

இலங்கையை பொறுத்த வரை பேட்ஸ்மேன்களின் நீண்ட வரிசையை பெற்றுள்ளது. கேப்டன் ஜெயவர்த்தனே, தில்ஷன், சந்திமால், சங்கக்காரா, ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

மேலும் பந்துவீச்சில் குலசேகரா, மலிங்கா ஜோடி எதிரணியினரை மிரட்டுகின்றனர். ஆல் ரவுண்டர்களாக வலம் வரும் ஆஞ்சிலோ மேத்யூஸ், மென்டிஸ், திருமன்னே ஆகியோர் ரன் குவிப்பிற்கும், விக்கெட்கள் வீழ்த்துவதிலும் அதிரடியாக செயல்படுகின்றனர்.

இரு அணிகளுக்கும் நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக கோப்பையை பெற வாய்ப்புள்ளது. இலங்கை அணியை பொறுத்த வரை இறுதிப் போட்டியில் ராசியில்லாத அணி என்ற பட்டப்பெயரை பெறும் அளவிற்கு, பலமுறை இறுதி போட்டியில் கோப்பையை கோட்டைவிட்டது. கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இறுதிப் போட்டியி்ல் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.

அதேபோல கடந்த 2009ம் ஆண்டு டுவென்டி20 உலக கோப்பையை இங்கிலாந்திடம் இழந்தது. கூட்டி கழித்து பார்த்தால், கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு இலங்கை அணிக்கு கிடைத்துள்ளது.

அதேபோல மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த 2004ம் ஆண்டு சாம்பின்ஸ் கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு மேற்கிந்திய தீவுகளால் பெரிய அளவில் எந்த கோப்பையை பெற முடியவில்லை. தற்போது அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் உள்ள நிலையில், மீண்டும் உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதே தொடரில் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகள் சூப்பர்-8 சுற்றில் மோதின. இதில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

மற்ற அணிகளுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசும் தன்மை கொண்ட இலங்கையின் மலிங்கா, மென்டிஸ் ஆகியோரின் பந்துகளை, கிறிஸ்கெய்ல் அடித்து தூள் கிளப்பி உள்ளார். அதேபோல சுனில் நரேன் போன்ற சுழல்பந்துவீச்சாளர்களின் பந்துகளை அடித்து விளையாடுவதில், இலங்கை பேட்ஸ்மேன்கள் தேறியவர்கள். மேலும் சொந்த மண்ணில் களமிறங்கும் இலங்கைக்கு, வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இருப்பினும் இரு அணிகளிலும் பலம் மற்றும் பலவீனங்கள் உள்ளதால், யார் வெற்றி பெறுவார் என்பதை அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது. எனவே நாளை கொழும்புவில் உள்ள பிரேததாசா மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டி விறுவிறுப்பு மிகுந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Story first published:  Saturday, October 6, 2012, 17:18 [IST]
English summary
Here are two teams desperate for a global trophy. The wait for one of them will end on Sunday with the ICC World Twenty20 2012. The other has to swallow the disappointment and carry on their quest for ICC silverware.
கருத்தை எழுதுங்கள்