Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இலங்கையை துவம்சம் செய்து உலகக் கோப்பையை வென்ற மேற்கு இந்தியத் தீவுகள்

Posted by:
Updated: Monday, October 8, 2012, 10:38 [IST]
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சொந்த மண்ணில் களமிறங்கிய இலங்கையை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி கோப்பை கைப்பற்றியது.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றது. இதில் லீக், சூப்பர்-8, அரையிறுதி போட்டிகள் முடிந்து நேற்று பரபரப்பு மிகுந்த இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் சொந்த மண்ணில் களமிறங்கிய இலங்கை, மேற்கிந்திய தீவுகளை எதிர்கொண்டது.

இலங்கையை துவம்சம் செய்து உலகக்  கோப்பையை வென்ற மேற்கு இந்தியத் தீவுகள்

கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், கோப்பையை வெல்லும் திட்டத்துடன் இலங்கை அணியில் ஹெராத்துக்கு பதிலாக, இளம் சுழல்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்செயா சேர்க்கப்பட்டார். ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

இந்த நிலையில் போட்டியின் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. ஆனால் முதல் ஓவரிலேயே துவக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 5 பந்துகளை சந்திந்து டக் அவுட்டானார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 16 பந்துகளை சந்தித்து 3 ரன்கள் மட்டுமே எடுத்து எல்பிடபில்யூ ஆனார்.

பவர் ப்ளே ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் 2 விக்கெட்களை இழந்து 14 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து வந்த சாமுவேல்ஸ் போட்டியின் நிலையையே மாற்றினார். அவருக்கு வெய்ன் பிராவோ ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். பிராவோ 19 ரன்களில் வெளியேற 14 ஓவர்களில் 73 ரன்களுக்கு 3 விக்கெட்கள் என்ற தர்மசங்கடமான நிலையில் மேற்கிந்திய தீவுகள் தவித்தது.

அதன்பிறகு அதிரடிக்கு மாறிய சாமுவேல்ஸ், இலங்கை பந்துவீச்சை தூள் கிளப்பினார். மலிங்காவின் ஒரே ஓவரில் 3 சிக்ஸ் அடித்தார். ஆனால் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆட யாரும் இருக்கவில்லை. போல்லார்டு(2), ரஸசல்(0) ஆகியோர் வந்த வேகத்தில் அவுட்டாகினர்.

கேப்டன் சம்மி மட்டும் சற்று அதிரடியாக ஆடி உதவினார். இறுதிக்கட்டத்தில் சாமுவேல்ஸ் 56 பந்துகளில் 6 சிக்ஸ், 3 பவுண்டரி அடித்து 78 ரன்கள் குவித்து அவுட்டானார். கேப்டன் டேரன் சம்மியின் 26 ரன்களை குவித்தார்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்களை இழந்து 137 ரன்கள் சேர்த்தது. இலங்கை தரப்பில் அஜந்தா மென்டிஸ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

138 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை விரட்டி இலங்கை அணியும், துவக்கம் முதலே தடுமாறியது. கேப்டன் ஜெயவர்த்தனே ஒரு முனையில் நின்று அதிரடியாக ஆட, மற்றொரு பகுதியில் வரிசையாக விக்கெட்கள் சரிந்தன. துவக்க வீரர் தில்ஷன் ரன் கணக்கை துவக்காமலேயே போல்டானார்.

சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடிய சங்கக்காரா 22 ரன்கள் எடுத்த நிலையில் போல்லார்டிடம் கேட்சாகி வெளியேறினார். அணியின் வெற்றிக்கு தேவையான ரன் விகிதம் அதிகரித்த போது, கேப்டன் ஜெயவர்த்தனேயும், ரிவர்ஸ் ஷாட் அடிக்க முயன்று 33 ரன்களில் அவுட்டானார்.

அதன்பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். ஆனால் கடைசிக்கட்டத்தில் அதிரடியாக ஆடிய குலசேகரா, ராம்பாலின் ஓவரில் 1 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால் 26 ரன்களில் அவரும் அவுட்டாக, இலங்கை ரசிகர்களின் எதிர்பார்ப்பு முற்றிலும் தகர்ந்தது.

18.4 ஓவர்களில் இலங்கை அனைத்து விக்கெட்களையும் இழந்து 101 ரன்களை எடுத்தது. இதன்மூலம் 36 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அபார வெற்றி பெற்றது. மேலும் முதன்முறையாக டுவென்டி20 உலக கோப்பையை கைப்பற்றியது.

உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் வழக்கம் போல மைதானத்தில் நடனமாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சாமுவேல்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

டுவென்டி20 உலக கோப்பையை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சுமார் ரூ.5.5 கோடி பரிசுத் தொகையும், இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை அணிக்கு ரூ.2 கோடியே 60 லட்சமும் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது.

33 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை:

மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த 1975, 1979 ஆண்டுகளில் ஒருநாள் போட்டி உலக கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு 33 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை அந்த அணி வென்றுள்ளது.

Story first published:  Monday, October 8, 2012, 10:20 [IST]
English summary
It is time to welcome the Caribbean Kings, the new champions of ICC World Twenty20. What an effort it was from the West Indies as they brilliantly defended a modest total of 137 to hand Sri Lanka their fourth straight loss in World Cup finals. West Indies won the final by 36 runs as the hosts were bowled out for 101 in 18.4 overs at R Premadasa Stadium.
கருத்தை எழுதுங்கள்