Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு கெய்ல் மட்டுமல்ல சாமுவேல்ஸும் ஒரு சூப்பர் தூண்!

Posted by:
Published: Monday, October 8, 2012, 11:10 [IST]
 

மேற்கு இந்தியத்  தீவுகளுக்கு கெய்ல் மட்டுமல்ல சாமுவேல்ஸும் ஒரு சூப்பர் தூண்!
 

கொழும்பு: மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணம், அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் என்ற கருத்தை, தவறு என்று நிரூபித்து காட்டியுள்ளார் ஆல் ரவுண்டர் சாமுவேல்ஸ். டுவென்டி20 உலக கோப்பையை மேற்கிந்திய தீவுகள் பொறுவதற்கு சாமுவேல்ஸின் பணி முக்கிய காரணமாக இருந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி என்றாலே சமீபகாலமாக ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் தான். ஏனெனில் அதிரடியாக பவுண்டரிகள், சிக்ஸ் விளாசும் இவர், அணியின் ஸ்கோர் உயர முக்கிய காரணமாக இருப்பவர்.

இந்த நிலையில் இலங்கையில் கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக பேசிய கிறிஸ் கெய்ல், அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அடுத்தடுத்து பல போட்டிகளில் தோல்வியை தழுவியது. அப்போது பல முன்னாள் வீரர்களும், கிறிஸ் கெய்ல் அணியில் இல்லாதது தான் இந்த தோல்விகளுக்கு காரணம் என்று கருத்து தெரிவித்தனர்.

அதன்பிறகு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட சுமூகமான பேச்சுவார்த்தையில், கிறிஸ் கெய்ல் மீண்டும் அணியில் சேர்த்து கொள்ளப்பட்டார். ஐபிஎல் தொடரில் ஆடி நன்கு பார்மில் இருந்த கிறிஸ் கெய்ல், உலக கோப்பை தொடரிலும் கலக்கினார்.

இதனால் முன்னாள் வீரர்கள் கூறிய கருத்து உண்மை என்று நம்பப்ப்டடது. இந்த நிலையில் நேற்று டுவென்டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் கலந்து கொண்டது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்ல் தொடக்கம் முதலே பந்துகளை வீணாடித்தார். 9 பந்துகளை சந்தித்த பிறகு தான் தனது ரன் கணக்கையே அவர் துவங்கினார்.

மேலும் 16 பந்துகளை சந்தித்து 3 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார். இதனால் மேற்கிந்திய தீவுகள் இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கருத்து நிலவியது. ஆனால் அடுத்து வந்த சாமுவேல்ஸ் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை சிறப்பாக உயர்த்தினார்.

இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மலிங்காவின் ஓவரில் 3 சிக்ஸ் அடித்து அசத்தினார். அரைசதம் கடந்த அவர், 6 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 78 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால் ஸ்கோரை உயர்த்த முடியாமல் தட்டுத்தடுமாறிய மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர்களின் முடிவில் 137 ரன்களை சேர்க்க முடிந்தது.

பேட்டிங்கில் கலக்கிய சாமுவேல்ஸ் பந்துவீச்சிலும் அசத்தினார். 4 ஓவர்களை வீசிய சாமுவேல்ஸ் 15 ரன்களை கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ஆனால் கிறிஸ்கெய்ல் 2 ஓவர்கள் வீசி 14 ரன்களை கொடுத்திருந்தார். மேலும் பீல்டிங்கிலும் சாமுவேல்ஸ் நேற்று சிறப்பாக செயல்பட்டார்.

அதேபோல மேற்கிந்திய தீவுகளின் சுழல்பந்துவீச்சாளர் சுனில் நரேன் 3.4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். வெய்ன் பிராவோ, கேப்டன் சம்மி, விக்கெட் கீப்பர் ராம்தின் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

டுவென்டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள் ஒரு குழுவாக செயல்பட்டுள்ளது. அதில் கிறிஸ் கெய்ல் என்ற ஒரே நபரின் ஆட்டம் மட்டும் சிறப்பாக இருந்ததாக கூற முடியாது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிகளுக்கு கிறிஸ் கெய்ல் மட்டுமே காரணம் என்ற கருத்து பொய்யானது.

English summary
West Indies team has provided an emphatic response at the World T20 final, to those who believed West Indian cricket team is all about Chris Gayle. And Marlon Samuels, West Indies’s man of the hour in the final, quietly crept past Gayle among the top run scorers of the tournament.
கருத்தை எழுதுங்கள்