Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடர்: தகுதி சுற்று போட்டிகள் இன்று தொடக்கம்

Posted by:
Published: Tuesday, October 9, 2012, 15:27 [IST]
 

சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடர்: தகுதி சுற்று போட்டிகள் இன்று தொடக்கம்
 

ஜோகனஸ்பர்க்: இலங்கையில் நடைபெற்ற டுவென்டி20 உலக கோப்பை தொடர் முடிந்துவிட்டது. அடுத்தப்படியாக பல நாட்டு உள்ளூர் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் தொடர் தென்ஆப்பிரிக்காவில் துவங்க உள்ளது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் இன்று முதல் துவங்க உள்ளது.

இலங்கையில் நடைபெற்ற டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் வரும் 13ம் தேதி முதல் பல நாட்டு உள்ளூர் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது. இதன் தகுதி சுற்று போட்டிகள் இன்று முதல் துவங்குகிறது.

சாம்பியன்ஸ் லீக் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல் 4 இடங்களை பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய உள்ளூர் அணிகள் பங்கேற்க உள்ளன.

மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பாஷ் தொடரில் முதல் 2 இடங்களை பிடித்த சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்ஷேர்ஸ் ஆகிய அணிகளும், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் மிவாய் சேலஞ்ச் தொடரில் முதல் 2 இடங்களை பிடித்த டைட்டன்ஸ், லயன்ஸ் ஆகிய அணிகளும் தொடரில் நேரடியாக பங்கேற்க உள்ளன.

மேற்கண்ட 8 அணிகளை தவிர தகுதி சுற்றின் மூலம் மீதமுள்ள 2 அணிகள் தேர்ந்தெடுக்கப்படும். தகுதி சுற்றில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளன. இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பிரிவில் ஆக்லாந்து ஏஸ் (ஆஸ்திரேலியா), சியால்கோட் ஸ்டாலின்ஸ் (பாகிஸ்தான்), ஹாம்ப்ஷைர் (இங்கிலாந்து) ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 2வது பிரிவில் உவா நெக்ஸ்ட்(இலங்கை), யார்க்ஷைர் (இங்கிலாந்து), டிரினிடாட் அண்ட் டொபாக்கோ (வெஸ்ட் இண்டீஸ்) ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

தகுதி சுற்று போட்டிகள் இன்று முதல் துவங்க உள்ளது. தகுதி சுற்று போட்டிகளில் ஒவ்வொரு அணியும், தங்களின் பிரிவில் உள்ள மற்ற 2 அணிகளுடன் ஒரு முறை மோதும். இதன்முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 அணிகள் முக்கிய லீக் சுற்றிற்கு தகுதி பெறும்.

இன்று நடைபெற உள்ள முதல் தகுதி சுற்று போட்டியில் இலங்கையின் உவா நெக்ஸ்ட், இங்கிலாந்தின் யார்க்ஷைர் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு நடைபெறும். அதேபோல இரவு 9 மணிக்கு நடைபெற உள்ள 2வது தகுதி சுற்று போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆக்லாந்து, பாகிஸ்தானின் சியால்கோட் அணிகள் மோத உள்ளன.

நேரடியாக தொடரின் லீக் போட்டிகளில் ஆட தகுதி பெற்ற 8 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் டைட்டன்ஸ் (தென் ஆப்பிரிக்கா) பெர்த் ஸ்கார்ஷேர்ஸ் (ஆஸ்திரேலியா), கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

பி பிரிவில் ஹைவல்டு லயன்ஸ் (தென் ஆப்பிரிக்கா), சிட்னி சிக்சர்ஸ் (ஆஸ்திரேலியா), சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. மீதமுள்ள 2 அணிகள் தகுதி சுற்று ஆட்டத்தின் மூலம் முடிவாகும்.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்களில் 10 பேர் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பல அணிகளாக களமிறங்க உள்ளனர்.

அவர்களின் பெயர்கள் வருமாறு:

டோணி (சென்னை சூப்பர் கிங்ஸ், கேப்டன்)
அஸ்வின் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
சுரேஷ் ரெய்னா(சென்னை சூப்பர் கிங்ஸ்)

கம்பிர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கேப்டன்)
பாலாஜி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
மனோஜ் திவாரி(கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

ஷேவாக் (டெல்லி டேர்டெவில்ஸ், கேப்டன்)
இர்பான் பதான்(டெல்லி டேர்டெவில்ஸ்)

ஹர்பஜன் சிங் (மும்பை இந்தியன்ஸ், கேப்டன்)
ரோஹித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்).

இலங்கையில் டுவென்டி20 உலக கோப்பையை தவறவிட்ட இந்திய அணியினர் மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் 4 இந்திய அணிகளில் ஏதாவது ஒரு அணி, சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றினால் ரசிகர்களின் அதிருப்தி குறைய வாய்ப்புள்ளது.

English summary
It is time to forget World T20 and welcome Champions League Twenty20 2012 in South Africa. India's national team might have failed in ICC event but their players have a lot to achieve in CLT20 from October 9 to 23.
கருத்தை எழுதுங்கள்