Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டெஸ்ட் போட்டிகளிலும் ஆல் ரவுண்டராக ஜொலிக்கனும்: யுவராஜ் சிங் விருப்பம்

Posted by:
Published: Saturday, October 13, 2012, 11:59 [IST]
 

டெஸ்ட் போட்டிகளிலும் ஆல் ரவுண்டராக ஜொலிக்கனும்: யுவராஜ் சிங் விருப்பம்
 

சண்டிகர்: புற்றுநோயில் இருந்து குணமாகி இந்தியாவின் டுவென்டி20 போட்டிகளுக்கான அணியில் இடம்பிடித்த யுவராஜ் சிங், தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கான அணியிலும் நுழைந்து ஆல் ரவுண்டராக ஆட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்(31). கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக ஆடிய இவர், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் இந்திய அணி, உலக கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

ஆனால் அதன்பிறகு யுவராஜ் சிங்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் யுவராஜ் சிங்கிற்கு நுரையீரலில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். நாடு திரும்பிய அவர் கடும் பயிற்சியின் மூலம் தனது பார்மை மீட்டெடுத்தார். இதன்மூலம் இந்திய அணிக்கு திரும்பிய அவர், இலங்கைக்கு எதிரான டுவென்டி20 உலக கோப்பை தொடரில் களமிறங்கினார்.

இந்த நிலையில் யுவராஜ் சிங் தற்போது, இந்தியாவின் டெஸ்ட் அணியிலும் களமிறங்கி, ஆல் ரவுண்டராக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது,

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக, திலீப் கோப்பைக்கான உள்ளூர் போட்டிகளில் ஆடி பயிற்சி பெற முடியும். எனவே திலீப் கோப்பைக்கான போட்டிகளில் ஆடுவது என்னை பொறுத்த வரை முக்கியமானது. திலீப் கோப்பைக்கான போட்டிகளில் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்தியாவின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிக்கு திரும்ப முடியும்.

புற்றுநோயில் இருந்து மீண்டுவந்துள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகளில் ஆட நான் கடினமாக உணரலாம். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி அணியில் 6வது பேட்ஸ்மேனாக களமிறங்க விரும்புகிறேன்.

பேட்டிங்கில் மட்டுமின்றி, எனது பந்துவீச்சிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். இதன்மூலம் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமின்றி, ஆல் ரவுண்டராக செயல்பட விரும்புகிறேன்.

இலங்கையில் நடைபெற்ற டுவென்டி20 உலக கோப்பை தொடரில் எனது ஆட்டம் திருப்திகரமாக இருந்தது. ஆனால் சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் நல்ல பார்மில் இருந்த நான், ஆடுகளத்தில் நீண்டநேரம் இருந்திருக்க வேண்டியிருந்தது என்றார்.

English summary
India's Yuvraj Singh, who made a strong comeback to the national T20 side during the World T20 in Sri Lanka, after battling cancer, is keen on cementing his berth in the Test team as an all-rounder.
கருத்தை எழுதுங்கள்