Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மோசமான ஆட்டத்திற்கு ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த அப்ரிதி

Posted by:
Published: Monday, October 15, 2012, 15:19 [IST]
 

மோசமான ஆட்டத்திற்கு ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த அப்ரிதி
 

லாகூர்: இலங்கையில் நடைபெற்ற டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தான் மோசமாக ஆடியதற்காக, ரசிகர்களிடம் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறியது. உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானின் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிதி சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினார். அவரது பந்துவீச்சிலும் எதிர்பார்த்த அளவிற்கு விக்கெட்கள் கிடைக்கவில்லை.

இதனால் சர்வதேச போட்டிகளில் இருந்து அப்ரிதி ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் முன்னாள் வீரர் மொய்ன் கான் போன்ற சிலர், அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். தற்போது மோசமாக ஆடி வரும் அப்ரிதி, சில காலம் ஓய்வெடுத்து கொண்டு தனது பழைய பார்மை மீட்க வேண்டும் என்று மொய்ன் கான் தெரிவித்தார்.

இந்த நிலையில் டுவென்டி20 உலக கோப்பை தொடரில் தனது மோசமான ஆட்டத்திற்காக, ஷாகித் அப்ரிதி, ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

டுவென்டி20 உலக கோப்பை தொடரில் நான் மோசமாக ஆடியதற்கு நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக ஆட முயற்சி செய்வேன். ஆனால் இப்போதைக்கு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.

இந்த நிலையில் நேற்று மாலையில் அப்ரிதி தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார். ஆனால் இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

இது குறித்து அப்ரிதியின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியதாவது,

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருப்பதால், அவர்களிடம் அனுமதி பெறாமல் பத்திரிக்கையாளர்களை சந்திக்க முடியாது என்றார்.

English summary
Pakistan cricketer Shahid Afridi has apologized over his bad performance in the recent T20 World Cup, for which he was being much criticized by the former cricketers.
கருத்தை எழுதுங்கள்