Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சாம்பியன்ஸ் லீக்... முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 'அடடா' தோல்வி!

Posted by:
Published: Monday, October 15, 2012, 9:12 [IST]
 

ஜோஹன்னஸ்பர்க்: சாம்பியன்ஸ் லீக் தொடரை தோல்வியுடன் தொடங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடந்த முதல் போட்டியில் கடுமையாக போராடியும் கடைசி நேர சொதப்பல்களால் தோல்வியைச் சந்தித்தது சென்னை.

சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகின்றன. இதில் ஐபிஎல் அணிகள் போராட்டத்துடன் ஆடி வருகின்றன. நேற்று நடந்த இரண்டு போட்டிகளிலும் ஐபிஎல் அணிகள் தோல்வி அடைந்தன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றுப் போனது. 2வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்தது.

சாம்பியன்ஸ் லீக்... முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 'அடடா' தோல்வி!

முதல் போட்டியில் சென்னை அணி, சிட்னி சிக்ஸர்ஸை சந்தித்தது. டாஸ் வென்ற கேப்டன் டோணி, சிட்னியை பேட் செய்யப் பணித்தார். இதையடுத்துக் களம் இறங்கி சிட்னி அணி அபாரமாக ஆடி ரன்களைக் குவித்து விட்டது.

சிட்னி கேப்டன் ஷான் வாட்சன் அபாரமாக ஆடி30 பந்துகளில் 46 ரன்களைக் குவித்தார். கடைசி வரிசையில் இறங்கிய ஹெண்ட்ரிக்ஸும் தன் பங்குக்கு அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 49 ரன்களைக் குவித்ததால் சிட்னி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து 185 ரன்களைக் குவித்து விட்டது.

கடுமையான வெற்றி இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி முரளி விஜய், ஹஸ்ஸி ஆகியோரை சொற்ப ரன்களில் பறி கொடுத்துத் தடுமாறியது. டூப்ளஸிஸ் சற்று சிறப்பாக ஆடி 43 ரன்களைக் குவித்தார். அதேபோல சுரேஷ் ரெய்னாவும் சிறப்பாக ஆடி 57 ரன்களைக் குவித்தார்.

ஆனால் மற்றவர்கள் சொதப்பி விட்டனர். பத்ரிநாத், டோணி, ஜடேஜா என முக்கிய வீரர்கள் சிங்கிள் டிஜிட்டில் வெளியேறியதால் சென்னையின் தோல்வி உறுதியானது. அஸ்வின் கடைசி நேரத்தில் சற்றுப் போராடிப் பார்த்தார். ஆனால் முடியவில்லை.

இறுதியில், சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்து ஆட்டமிழந்து தோல்வியைச் சந்தித்தது.

பேட்டிங்கில் கலக்கிய ஹெண்ட்ரிக்ஸ், பவுலிங்கிலும் 3 விக்கெட்களை வீழ்த்தி சிட்னிக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்து விட்டார்.

2வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி

அடுத்து நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, ஹைவெல்ட் லயன்ஸ் அணி தோற்கடித்தது.

முதலில் ஆடிய மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. மிட்சல் ஜான்சன் 30 ரன்களை எடுத்ததே அந்த அணியின் அதிகபட்ச தனி நபர் ஸ்கோராகும். சச்சின் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் சந்தித்த பந்துகள் 24 என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மித் 26 ரன்களைக் குவித்தார். ரோஹித் சர்மாவின் பங்கு 27 ஆகும். கீரன் போலர்ட் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஆடிய லயன்ஸ் அணிக்கு, டி காக் மற்றும் மெக்கன்சி வெற்றியைத் தேடித் தந்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர். குறிப்பாக மெக்கன்சி 41 பந்துகளில் 68 ரன்களை விளாசினார். டி காக் 33 பந்துகளில் 51 ரன்களைக் குவித்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.

2 விக்கெட்களை மட்டுமே இழந்த லயன்ஸ் அணி 18.5 ஓவர்களில் வெற்றி இலக்கைத் தொட்டது.

English summary
Sydney Sixers are shaping as one of the teams to beat in the Champions League after Moises Henriques produced a match-winning performance to slay Twenty20 giants Chennai Super Kings in their opening match of the tournament on Sunday. In another match MI were defeated by Highveld Lions.
கருத்தை எழுதுங்கள்