Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சாம்பியன்ஸ் லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் இன்றைய போட்டியில் எழுச்சி பெறுமா?

Posted by:
Published: Tuesday, October 16, 2012, 18:02 [IST]
 

கேப்டவுன்: தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 தொடரில் இன்று நடைபெற உள்ள லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைவெல்ட் லயன்ஸ் அணிகள் மோத உள்ளன.

சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற உள்ள பி பிரிவின் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைவெல்ட் லயன்ஸ் அணிகள் மோத உள்ளன.

சாம்பியன்ஸ் லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் இன்றைய போட்டியில் எழுச்சி பெறுமா?
டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் லீக் போட்டியில் சிட்னி சிக்சரிடம் 14 ரன்களில் தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால், இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கட்டாயம் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

துவக்க வீரர் முரளி விஜய் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். முதல் லீக் போட்டியில் 1 ரன் மட்டுமே எடுத்து போல்டானார். மேலும் மிடில் ஆடர் பேட்ஸ்மேன் பத்ரிநாத்தின் ஆட்டமும் சொல்லி கொள்ளும் அளவில் இல்லை. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்று வீரர்கள் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிடில்ஆடரில் சுரேஷ் ரெய்னா தொடர்ந்து அதிரடியாக ஆடி வருவது அணிக்கு பக்கபலம். அதிரடி வீரர் டூப்ளஸிஸ் வழக்கம் போல அதிரடியை தொடர்ந்து வருகிறார். ஆனால் கேப்டன் டோணி, ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களில் ஏமாற்றுவது வருத்தம்.

கடைசி கட்டத்தில் அஸ்வின் அடித்து ஆடி தனது பேட்டிங் திறமையை நிரூபித்துள்ளார். அதேபோல இலங்கை டுவென்டி20 உலக கோப்பை தொடரில் கலக்கிய ஆல் ரவுண்டர் குலசேகரா இன்று அணியில் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சை பொறுத்த வரை யோமகேஷ், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தவறுகிறார். பொலிஞ்சர், ஹில்பெனாஸ் ஆகியோரது பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. எனவே ஆல்ரவுண்டர் அல்பி மார்கல் இன்றைய ஆட்டத்தில் சேர்த்து கொள்ளப்பட வாய்ப்புள்ளது.

ஹைவல்ட் லயன்ஸ்:

பேட்டிங்கை பொறுத்த வரை மிடில் ஆடரில் குவின்டன் டி கேக் சிறப்பாக ஆடி வருகிறார். அதேபோல நீல் மெக்கேன்ஸியும் அதிரடியாக ஆடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் வெற்றிக்கு மேற்கண்ட இருவரும் தான் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.

பந்துவீச்சை பொறுத்த வரை சோயல் தன்வீர், சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்களை மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் ரன்களை வாரி கொடுத்தாலும், 2 விக்கெட்களை இவர் வீழ்த்தினார். ஆரோன் பன்கிஷோ சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவது எளிதாகும். ஆனால் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள எதிரணியினர் இதற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துவர் என்று தெரிகிறது. எனவே இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

English summary
Having lost their first match against Sydney Sixers, Chennai Super Kings look to get back to winning ways as they take on Highveld Lions at Cape Town on Tuesday.
கருத்தை எழுதுங்கள்