Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

குத்துச்சண்டை வீரராக மாறுகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிளின்டாப்!

Posted by:
Updated: Tuesday, October 16, 2012, 17:29 [IST]
 

லண்டன்: காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இளம்வயதிலேயே ஓய்வுபெற்ற முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆன்ட்ரூ பிளின்டாப், தற்போது குத்துச்சண்டை வீரராக மாற போவதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆன்ட்ரூ பிளின்டாப். ஆடுகளத்தில் ஆல் ரவுண்டராக ஜொலித்த பிளின்டாப், கடந்த 2010ம் ஆண்டு அடுத்தடுத்து காயமடைந்தார். இதனால் தொடர்ந்து அவரால் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. இதையடுத்து சர்வதேச போட்டிகளில் இருந்து அவரது 31வது வயதிலேயே ஓய்வை அறிவித்தார்.

குத்துச்சண்டை வீரராக மாறுகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிளின்டாப்!

இந்த நிலையில் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது கவனத்தை மாற்றியுள்ள பிளின்டாப், குத்துச்சண்டை வீரராக மாற பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் தான் ஒரு சிறந்த குத்துச்சண்டை வீரராக ஜொலிக்க போவதாக அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து 'டெய்லி மெயில்' பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

எனக்கு தற்போது கிடைத்துள்ள வாய்ப்பை இழக்க நான் விரும்பவில்லை. எனது 31வது வயதில் கடைசி கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டேன். தற்போது எனக்கு 34 வயதாகிறது. குத்துச்சண்டையை நான் மிகவும் விரும்புகிறேன். எனவே அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். குத்துச்சண்டை என்னை எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நான் குத்துச்சண்டையில் பங்கேற்க ஆவலாக உள்ளதை, பலரும் விமர்சிக்க தயாராக உள்ளனர். விமர்சனம் செய்வது என்பது எளிதான பணி. குத்துச்சண்டை பயிற்சி மேற்கொள்ள அதிகாலையில் எழுந்திருக்க தேவையில்லை. சாப்பாட்டு விஷயத்தில் எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. பீர் குடிக்கலாம். இதன்மூலம் ஒரு புதிய வாழ்க்கையை நான் கற்று வருகிறேன்.

வாரத்தில் 9 முதல் 10 பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று வருகிறேன். குத்துச்சண்டை பயிற்சி மேற்கொள்ள எனது குடும்பத்தினரும் ஆதரவாக உள்ளனர். குத்துச்சண்டை பயிற்சி முடித்து கொண்டு வீட்டிற்கு சென்ற போது, எனது உதடுகள் வீங்கி, மூக்கில் ரத்தம் ஒழுகுவதை பார்த்த எனது மனைவி துவக்கத்தில் சற்று அதிர்ச்சி அடைந்தார். ஆனால் தொடர்ந்து ஆதரவை தெரிவித்து வருகிறார் என்றார்.

குத்துச்சண்டை ஆடுகளத்தில் அனுபவமில்லாத பிளின்டாப், வரும் நவம்பர் மாதம் 30ம் தேதி முதல் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க உள்ளார். இதற்காக முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் பெரி மெக்கெயினிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.

சர்வதேச அளவில் 79 டெஸ்ட், 141 ஒருநாள் மற்றும் 7 டுவென்டி20 கிரிக்கெட் போட்டிகளில் பிளின்டாப் கலந்து கொண்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 12 ஆண்டுகள் ஆடிய இவர், மொத்தம் 400 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published:  Tuesday, October 16, 2012, 15:33 [IST]
English summary
Shocking but true as Andrew Flintoff, the former England all-rounder has decided to launch himself as a professional boxer.
கருத்தை எழுதுங்கள்