Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சாம்பியன்ஸ் லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் சொதப்பல் ஆட்டம்-2வது போட்டியிலும் தோல்வி

Posted by:
Published: Wednesday, October 17, 2012, 10:09 [IST]
 

சாம்பியன்ஸ் லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் சொதப்பல் ஆட்டம்-2வது போட்டியிலும் தோல்வி
 

கேப்டவுன்: சாம்பியன்ல் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஹைய்வெல்டு லயன்ஸ் அணி்க்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடரில் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கேப்டவுனில் நடந்த லீக் போட்டியில் பி பிரிவை சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைவெல்டு லயன்ஸ் அணிகள் மோதின.

முதல் லீக் போட்டியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, நேற்றைய போட்டியில் மைக்கேல் ஹஸ்ஸி, யோமகேஷ் ஆகியோர் நீக்கப்பட்டு, ஆல்பி மார்கல், விரிதிமன் சகா ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டனர்.

போட்டியின் 'டாஸ்' வென்ற ஹைவெல்டு லயன்ஸ் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. துவக்க வீரர்களான டூப்ளஸிஸ், முரளி விஜய் ஜோடி அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளித்தது.

அதிரடியாக ஆடிய டூப்ளஸிஸ் 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். முரளிவிஜய் பொறுமையாக ஆட, அவருடன் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா வந்த வேகத்தில் 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 20 ரன்களில் வெளியேறினார்.

22 ரன்கள் எடுத்த முரளி விஜய் எல்.பி.டபில்யூ ஆனார். அதன்பிறகு கேப்டன் டோணியும், ஜடேஜாவும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினர். ஜடேஜா 16 பந்துகளில் 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 21 ரன்களை சேர்த்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆல்பி மார்கல் 4 ரன்களில் கேட்சாகி வெளியேறினார்.

கடைசி ஓவர் வரை ஆடிய கேப்டன் டோணி 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 34 ரன்களில் அவுட்டானார். பத்ரிநாத் வந்த வேகத்தில் 2 சிக்ஸ் அடிக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 150 ரன்களை கடந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தது. பத்ரிநாத் 27 ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். ஹைவெல்டு லயன்ஸ் அணியின் தரப்பில் சார்பில் பங்கிசோ 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

எளிய இலக்கை விரட்டிய ஹைவெல்டு லயன்ஸ் அணிக்கு, போலிஞ்சர் முதல் பந்திலேயே அதிர்ச்சி அளித்தார். கேப்டன் பீட்டர்சனை டக் அவுட்டாக்கினார். குயின்டன் டி காக் 5 ரன்களில் வெளியேறினார்.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த குலாம், நீல் மெக்கன்ஸி ஜோடி, அணியின் சரிவை மீட்டது. அதிரடியாக ஆடிய குலாம் போடி 4 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்து 64 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு மெக்கன்ஸ் உடன் ஜோடி சேர்ந்த ஜீன் சிம்ஸ் பொறுப்பாக ஆடினார். 33 ரன்கள் எடுத்த மெக்கன்ஸ் அவுட்டானார்.

ஹைவெல்டு லயன்ஸ் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆல்பி மார்கல் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. அடுத்த 2 பந்துகளில் சிம்ஸ் 2 பவுண்டரி அடிக்க, லயன்ஸ் அணி 19.3 ஓவரில் 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிம்ஸ் (39), மோரிஸ் (12) ஆகியோர் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.

சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய ஹைவெல்டு லயன்ஸ், நேற்று தனது 2வது வெற்றியை பதிவு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 2 லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால், அடுத்துள்ள 2 போட்டிகளிலும் அதிக ரன்ரேட் உடன் வெற்றி பெற்றால் மட்டுமே, அரையிறுதி போட்டிக்கு முன்னேற முடியும்.

English summary
Highveld Lions beat Chennai Super Kings by 6 wickets in group B match in Champions League 2012.
கருத்தை எழுதுங்கள்