Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் போட்டி-வரும் ஜனவரி 3ம் தேதி?

Posted by:
Updated: Thursday, October 18, 2012, 18:34 [IST]
 

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் போட்டி-வரும் ஜனவரி 3ம் தேதி?
 

கொல்கத்தா: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உறவை புதுப்பிக்கும் வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து ஒருநாள் போட்டியை நடத்துவது குறித்து இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவு முறிந்தது. மேலும் பாகிஸ்தானில் பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் இருப்பதாக கூறி, மற்ற நாட்டு அணிகளும் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயங்கின.

இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியாவின் உதவியை நாடியது. இந்தியாவுடனான கிரிக்கெட் உறவை மீண்டும் புதுப்பிப்பது குறித்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.

இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்த இருத்தரப்பினரும் ஒப்பு கொண்டனர். ஆனால் இந்திய அணி ஏற்கனவே பல போட்டிகளில் ஒப்பந்தமாகி உள்ளதால், பாகிஸ்தானுடனான போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் அடுத்த மாதம்(நவம்பர்) இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வர உள்ள இங்கிலாந்து அணி, இந்தியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள், 2 டுவென்டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் ஆகியவற்றில் ஆட உள்ளது. டுவென்டி20 போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் 22ம் தேதியுடன் முடிவடைகிறது.

அதன்பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி 11ம் தேதி இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் துவங்குகிறது. இதற்கு இடைப்பட்ட நாட்களில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் போட்டியை நடத்தலாம் என்ற கருத்து எழுந்தது.

எனவே அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியை நடத்துவது குறித்து இந்தியா, பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இப்போட்டியை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Story first published:  Thursday, October 18, 2012, 16:59 [IST]
English summary
Bilateral ties between arch rivals India and Pakistan is all set to resume, as Kolkata's Eden Gardens is hosting the ODI that is tentatively scheduled on January 3, 2013.
கருத்தை எழுதுங்கள்