Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

தென்ஆப்பிரிக்க ஆடுகளங்களில் ஆட ஐபிஎல் அணிகள் திணறுகின்றன: டுபிளஸிஸ் கவலை

Posted by:
Published: Thursday, October 18, 2012, 17:27 [IST]
 

தென்ஆப்பிரிக்க ஆடுகளங்களில் ஆட ஐபிஎல் அணிகள் திணறுகின்றன: டுபிளஸிஸ் கவலை
 

கேப்டவுன்: தென்ஆப்பிரிக்காவில் நிலவும் சூழ்நிலையை ஏற்று, அந்நாட்டு ஆடுகளங்களில் ஆட ஐபிஎல் அணிகள் திணறுகின்றன என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டுபிளஸிஸ் கவலை தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற 4 அணிகள் பங்கேற்கின்றன. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை தவிர, மற்ற 3 அணிகளும் தோல்விகளை தழுவி வருகின்றன.

இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 போட்டிகளில் பங்கேற்று 2 தோல்விகளையும், ஒரு போட்டி 'டை'யிலும் முடிந்தது. இதனால் 2 புள்ளிகளுடன், அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்றுள்ள 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் பங்கேற்றுள்ள முதல் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. இந்தியாவை சேர்ந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி மட்டுமே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆடுகளங்களில் ஆட ஐபிஎல் அணிகள் திணறி வருவதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டுபிளஸிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

எந்த நாட்டிற்கு சென்றாலும், அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப விரைவில் நம்மை மாற்றி கொள்ள வேண்டும். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் நிலவும் சூழ்நிலைக்கு மாற முடியாமல் தவிக்கும், ஐபிஎல் அணிகள் ஒவ்வொன்றாக சாம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து வெளியேறி வருகின்றன.

தென்ஆப்பிரிக்காவில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றி கொண்ட தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் பங்கேற்ற 2வது போட்டியில் வெற்றி விளிம்பிற்கு சென்று தோல்வியை தழுவியது. எங்கள் அணியின் வெற்றியை குலாம் போடி சிறப்பாக ஆடி பறித்து கொண்டார். என்னை பொறுத்த வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீ்ச்சு சிறப்பாக தான் உள்ளது.

எதிரணிக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால் அவர்கள் எளிதாக வெற்றி பெற முடிந்தது. தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெறுவது மிகவும் கடினம். இரவில் பனிப்பொழிவு இருக்கும் போது, பேட்டிங் செய்வது சற்று எளிதாக இருக்கும் என்று கருதுகிறேன். அதிலும் குறிப்பாக 2வது இன்னிங்ஸின் 6வது ஓவருக்கு பிறகு, தென்ஆப்பிரிக்க ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக செயல்படும் என்று நினைக்கிறேன் என்றார்.

English summary
Chennai Super Kings' opener Faf du Plessis feels IPL teams are finding it difficult to adapt to South African conditions which is evident in their performance, as all the teams have failed to register a win except Delhi Daredevils.
கருத்தை எழுதுங்கள்