Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாகிஸ்தான் சிறந்த நாடு: சனத் ஜெயசூர்யா

Posted by:
Published: Friday, October 19, 2012, 15:38 [IST]
 

கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாகிஸ்தான் சிறந்த நாடு: சனத் ஜெயசூர்யா
 

கராச்சி: வெளிநாட்டு கிரிக்கெட் அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாகிஸ்தான் சிறந்த நாடு என்று முன்னாள் இலங்கை கேப்டன் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பிறகு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவு முறிந்தது. மேலும் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு கேள்வி குறியானதால், மற்ற நாட்டு அணிகளும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயங்கின.

இந்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அணி தைரியமாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது லாகூரில் இலங்கை வீரர்கள் பயணித்த பஸ்சின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இலங்கை வீரர்களுக்கு பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் உட்பட 8 பேர் பலியாகினர். அதிஷ்டவசமாக கிரிக்கெட் வீரர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

அதன்பிறகு பாகிஸ்தானுக்கு எந்த சர்வதேச கிரிக்கெட் அணியும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.

இதனால் தற்போது இந்தியா உட்பட சர்வதேச கிரிக்கெட் அணிகளை, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைத்து வருகிறது. பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சர்வதேச வீரர்களை கொண்ட அணியும், பாகிஸ்தான் அணியும் மோதும் 2 டுவென்டி20 போட்டிகள் பாகிஸ்தானில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் போட்டி நாளையும், 2வது போட்டி 21ம் தேதியும் நடைபெற உள்ளது.

இதில் சர்வதேச அணியின் கேப்டனாக முன்னாள் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஆந்த்ரே நெல், நான்டெல் ஹெய்வார்ட், மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் ரிக்கார்டோ பவல், ஜெர்மைன் லாசன் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். சர்வதேச அணிக்கு எதிராக ஆட உள்ள பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக அப்ரிதி செயல்பட உள்ளார்.

போட்டியில் கலந்து கொள்ள பாகிஸ்தான் வந்து சேர்ந்த சனத் ஜெயசூர்யா, செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

பாகிஸ்தானில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட் வீரர்களுக்கான பாதுகாப்பு என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடுகிறது. ஆனால் என்னை பொறுத்த வரை கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாகிஸ்தான் பாதுகாப்பான நாடு.

லாகூரில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பாகிஸ்தானில் உள்ள மக்கள் கிரிக்கெட்டை நேசிக்கின்றனர் என்றார்.

ஆனால் பாகிஸ்தானில் நடைபெற உள்ள மேற்கொண்ட 2 போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பை ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Former Srilankan captain Sanath Jayasuriya said that, It depends on country to country (whether they tour Pakistan) but in my opinion Pakistan is a safe country.
கருத்தை எழுதுங்கள்