Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கேப்டன் சுரேஷ் ரெய்னா தலைமையில் பந்துவீசி- பீல்டிங் செய்த டோணி

Posted by:
Published: Tuesday, October 23, 2012, 13:38 [IST]
 

கேப்டன் சுரேஷ் ரெய்னா தலைமையில் பந்துவீசி- பீல்டிங் செய்த டோணி
 

துர்பன்: சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 தொடரின் நேற்றைய போட்டியில் யார்ஷையர் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பெற்றது. இப்போட்டியில் நேற்று கேப்டன் பதவியை சுரேஷ் ரெய்னாவிடம் கொடுத்துவிட்டு, பந்துவீசி, பீல்டிங் செய்தார் டோணி.

சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், யார்க்ஷையர் அணிகள் மோதின. ஏற்கனவே இரு அணிகளும் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்ததால், நேற்றைய போட்டி விறுவிறுப்பின்றி இருந்தது.

இதனால் நேற்று தனது கேப்டன் பதவியை சுரேஷ் ரெய்னாவிற்கு கொடுத்த டோணி, சகவீரர்களுடன் சாதாரண வீரராக களமிறங்கினார். மேலும் விரிதிமன் சகாவிடம் கீப்பிங் பொறுப்பை அளித்த டோணி, பீல்டிங் செய்தார்.

போட்டியின் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய யார்க்ஷையர் அணி மந்தமாக ரன் குவிப்பை துவங்கி, கொஞ்ச கொஞ்சமாக அதிரடிக்கு மாறியது. துவக்க வீரரும், அணியின் கேப்டனுமான காலே அதிரடியாக 2 சிக்ஸ், 1 பவுண்டரி அடித்து 23 ரன்களை எடுத்து போலிங்கரிடம் கேட்சாகி வெளியேறினார்.

அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய லித் 11 ரன்களில் ஏமாற்றினார். ரூட் பந்துகளை வீணடித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்து கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார்.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த மில்லரும், பேல்லன்ஸூம் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். மில்லர் 28 ரன்கள் எடுத்து அஸ்வினிடம் கேட்சாகி வெளியேறினார். ஆனால் அதிரடியை தொடர்ந்த பேல்லன்ஸ் அரைசதம் கடந்தார். 38 பந்துகளில் 5 சிக்ஸ், 1 பவுண்டரி அடித்த அவர் 58 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். இறுதிக்கட்டத்தில் வந்த ஹாங்ஸன் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

நேற்று பந்துவீச்சாளராக களமிறங்கிய டோணி 2 ஓவர்களை வீசினார். இதில் முதல் ஓவரில் (போட்டியின் 15வது ஓவர்) 7 ரன்களை மட்டுமே கொடுத்தார். ஆனால் டோணி வீசிய 2வது ஓவரில்(17வது ஓவர்) பேல்லன்ஸ் 2 சிக்ஸ் அடித்து அசத்தினார். 2 ஓவர்களில் டோணி மொத்தம் 25 ரன்களை கொடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்களை இழந்த யார்க்ஷையர் அணி மொத்தம் 140 ரன்களை சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் மார்கல், போலிஞ்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

கேப்டன் ரெய்னா: எளிய இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்கம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. துவக்க டுபிளஸ்ஸி 1 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். முரளி விஜய் வந்த வேகத்தில் 2 பவுண்டரி அடித்து 13 ரன்களில் வெளியேறினார்.

அதன்பிறகு கேப்டன் சுரேஷ் ரெய்னாவும், பத்ரிநாத்தும் ஜோடி சேர்ந்து பொறுப்பாக ஆடினர். 1 சிக்ஸ், 1 பவுண்டரி அடித்த ரெய்னா, 31 ரன்களில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதிரடியாக ஆடிய பத்ரிநாத் 47 ரன்களை எடுத்து போல்டானார். ஜடேஜா 5 ரன்களில் திருப்திப்பட்டு கொண்டார்.

அதிரடி டோணி: கடைசி கட்டத்தில் வந்த டோணி 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 31 ரன்களை எடுத்து வெற்றி உதவினார். இதன் மூலம் 19 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த பத்ரிநாத்திற்கு, ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.

'சிம்பிள்' டோணி: நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றாலும், சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேற முடியாது. இதனால் டோணி நேற்று சாதாரண வீரராக களமிறங்கினார். பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட டோணி, பவுண்டரிக்கு சென்ற பந்துகளை சிறப்பாக தடுத்தார்.

English summary
Chennai Super Kings skipper MS Dhoni, switched his role and played under Suresh Raina's captaincy in their last league match against Yorkshire at Kingsmead, Durban on Monday.
கருத்தை எழுதுங்கள்