Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சாம்பியன்ஸ் லீக்: டெல்லி டேர்டெவில்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா?

Posted by:
Published: Thursday, October 25, 2012, 17:07 [IST]
 

சாம்பியன்ஸ் லீக்: டெல்லி டேர்டெவில்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா?
 

டர்பன்: சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள முதல் அரையிறுதி போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், ஹைவல்டு லயன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்தியாவை சேர்ந்த ஒரே அணியான டெல்லி டேர்டெவில்ஸ் இன்று வெற்றி பெற்றால் மட்டும், இறுதி போட்டிக்கு முன்னேற முடியும்.

சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று முதல் அரையிறுதி போட்டிகள் துவங்குகிறது. இன்று நடைபெற உள்ள முதல் அரையிறுதி போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், ஹைவல்டு லயன்ஸ் அணிகள் மோத உள்ளன.

ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 3 அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன. டெல்லி டேர்டெவில்ஸ் மட்டுமே தொடரில் இன்னும் நீடிக்கிறது. இதனால் இன்று நடைபெற உள்ள போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டெல்லி டேர்டெவில்ஸ்:

டெல்லி டேர்டெவில்ஸ் அணியை பொறுத்த வரை, கேப்டன் ஜெயவர்த்தனே, ஷேவாக் ஆகியோர் அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளிக்கின்றனர். ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பீட்டர்சன் தொடர்ந்து சொதப்பி வருகிறார். ரோஸ் டெய்லர் பேட்டிங்கில் ஆறுதல் அளிக்கிறார். ஆனால் அணியில் உள்ள ஆல் ரவுண்டர்கள் பேட்டிங்கில் பிரகாசிக்காமல் இருப்பது பின்னடைவு.

பந்துவீச்சை பொறுத்தவரை தென்னாப்பிரிக்காவில் வேகப்பந்துவீச்சு தான் எடுப்படுகிறது. மோனி மார்கல் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இதுவரை 2 போட்டிகளில் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவருக்கு இர்பான் பதான், உமேஷ் யாதவ், அஜித் அகர்கார் ஆகியோர் ஒத்துழைப்பு கொடுத்து பந்துவீசி வருகிறார்.

ஹைவல்டு லயன்ஸ்:

ஹைவல்டு லயன்ஸ் அணியை பொறுத்த வரை குலாம் போடி மற்றும் ஆரோன் பாகன்கிசோ ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். சுழல்பந்துவீச்சாளரான ஆரோன் இதுவரை 4 போட்டிகளில் 8 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் போடி 4 போட்டிகளில் 152 ரன்களை குவித்துள்ளார்.

பந்துவீச்சை பொறுத்தவரை சோஹைல் தன்வீர், டிரிக் நானீஸ் ஆகியோர் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரன் குவிப்பை தடுத்து நிறுத்த வாய்ப்புள்ளது. மேலும் சொந்த மண்ணில் லயன்ஸ் அணி களமிறங்குவது கூடுதல் பலம்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி இறுதிப் போட்டி வாய்ப்பை தடுத்து நிறுத்த ஹைவல்டு லயன்ஸ் முயற்சி செய்யும் என்பதால், இன்றைய போட்டி விறுவிறுப்பு மிகுந்ததாக இருக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு போட்டி துவங்குகிறது.

English summary
The last Indian Premier League(IPL) team left in Champions League 2012, Delhi Daredevils, have made it to the semi-finals and carry India's hopes as they face Highveld Lions in today's first semi-final.
கருத்தை எழுதுங்கள்