Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டெக்கான் சார்ஜர்ஸ் வீரர்களை சன் டிவியின் புதிய அணியில் பயன்படுத்தி கொள்ளலாம்: பிசிசிஐ

Posted by:
Published: Friday, October 26, 2012, 17:07 [IST]
 

டெக்கான் சார்ஜர்ஸ் வீரர்களை சன் டிவியின் புதிய அணியில் பயன்படுத்தி கொள்ளலாம்: பிசிசிஐ
 

மும்பை: ஐபிஎல் தொடரில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது ஹைதராபாத்தை அடிப்படையாக கொண்ட புதிய அணியை சன் டிவி குழுமம் வாங்கியுள்ளது. எனவே டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களை, புதிய அணி பயன்படுத்தி கொள்ளலாம் என்ற இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி, வீரர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதனால் பிசிசிஐயின் விதிமுறைகளை மீறியதாக கூறி, அந்த அணி ஐபிஎல் குழுவில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிலையில் ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட புதிய ஐபிஎல் அணியின் ஏலம் நேற்று மும்பையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட சன் டிவி குழுமம், ஆண்டிற்கு 85.05 கோடி மதிப்பில் புதிய அணியின் உரிமையை வாங்கியது. எனவே புதிய அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட டெக்கான் சார்ஜஸ் அணியின் வீரர்களை, சன் டிவி குழுமம் தனது புதிய அணிக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று பிசிசிஐ தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ஆடி வந்த அனைத்து வீரர்களையும், புதிய ஐபிஎல் அணிக்கு எடுத்து கொள்ளலாம். டெக்கான் சார்ஜர்ஸ் அணியி்ல் இருந்த வீரர்களை தேர்வு செய்ய, வரும் 31ம் தேதி வரை காலகெடு அளிக்கப்பட்டுள்ளது. எனவே டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ஆடிய வீரர்களில் யாரை தேர்வு செய்வது என்பதை சன் டிவி குழுமம் தீர்மானித்து கொள்ளலாம்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ஆடிய வீரர்களின் கடந்த ஆண்டின் சம்பள பாக்கி முழுமையாக அளிக்கப்பட்டுள்ளது. எனவே வீரர்களை தேர்வு செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. டெக்கான் சார்ஜர்ஸ் அணி வாங்க அளிக்கப்பட்ட தொகையை காட்டிலும், 3 மடங்கு அதிக விலைக்கு புதிய அணி வாங்கப்பட்டுள்ளது.

கடந்த முறை ஐபிஎல் குழுவை விரிவுப்படுத்திய போது, இந்த மதிப்புடன் தற்போதைய மதிப்பை கணக்கிட்டால், தற்போதைய அணிக்கு அதிக மதிப்பு கிடைத்துள்ளது. ஐபிஎல் குழுவில் துவக்கத்தில் இருந்த 8 அணிகளுக்கு 10 ஆண்டு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. இதில் தற்போது 5 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இன்னும் 5 ஆண்டுகள் மீதமுள்ளது.

இந்த 10 ஆண்டு கால ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு, அணி ஒப்பந்தத்திற்கு புதியதாக பணம் செலுத்த தேவையில்லை. அதற்கு பதிலாக 20 சதவீதம் வருமானம் மட்டுமே செலுத்தினால் போதுமானது.

புதிய அணியை வாங்கியுள்ள நிறுவனம், ஊடகத் துறையை சார்ந்தவர்கள் என்பதால் ஐபிஎல் போட்டிகள் மேலும் வளர்ச்சி அடையும். எனவே புதிய அணியை வாங்க எத்தனை பேர் முன்வந்தார்கள் என்பது முக்கியமல்ல. புதிய அணியை ஒரு சிறந்த நிறுவனம் வாங்கியுள்ளது என்பது தான் முக்கியம் என்றார்.

English summary
All the players who were with the Deccan Chargers, whose IPL contract has been terminated by the Cricket Board, will be available for picking by Sun TV Network which on Thursday won the Hyderabad franchise for Rs. 85.05 crore per year, said BCCI president N Srinivasan.
கருத்தை எழுதுங்கள்