Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் டெல்லி டேர்டெவில்ஸ் தோல்வி-கடைசி ஐபிஎல் அணியும் 'அவுட்'!

Posted by:
Published: Friday, October 26, 2012, 9:58 [IST]
 

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் டெல்லி டேர்டெவில்ஸ் தோல்வி-கடைசி ஐபிஎல் அணியும் 'அவுட்'!
 

டர்பன்: சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவை சேர்ந்த ஒரே அணியான டெல்லி டேர்டெவில்ஸ் அணி, நேற்று அரையிறுதி போட்டியில் 22 ரன்களில் தோல்வி அடைந்தது. இதனால் எதிரணியான ஹைவல்டு லயன்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியாவை சேர்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பங்கேற்றன. ஆனால் லீக் சுற்றில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை தவிர மற்ற 3 அணிகளும் வெளியேறின.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், ஹைவல்டு லயன்ஸ் அணிகள் மோதின. தொடரில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிச்சயம் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் போட்டியின் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஜெயவர்த்தனே நேற்று விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரோஸ் டெய்லர் கேப்டனாக செயல்பட்டார்.

ஹைவல்டு லயன்ஸ் அணிக்கு குலாம் போடியும், கேப்டன் அல்விரோ பீட்டர்சனும் சிறப்பான துவக்கம் அளித்தனர். அவ்வப்போது அதிரடி காட்டிய இந்த ஜோடி, அணியின் ஸ்கோரை மெதுவாக உயர்த்தியது.

ஆனால் பீட்டர்சன் 19 பந்துகளில் 1 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 24 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ்வின் வேகத்தில் வெளியேறினார். அடுத்து வந்த குவான்டம் டி கார்க் வந்த வேகத்தில் 2 பவுண்டரிகள் அடித்து 11 ரன்களில் உன்முக்த் சந்த்திடம் கேட்ச் கொடுத்தார். தவாயின் பிரிடோரியஸ் 3 ரன்களில் ஏமாற்றினார்.

அதன்பிறகு துவக்க வீரர் குலாம் ஜோடி சேர்ந்த நீல் மெக்கின்ஸ் அதிரடியாக ரன்களை சேர்த்தார். பொறுமையாக ஆடி வந்த குலாம் போடி அரைசதம் கடந்து அவுட்டானார். அடுத்து வந்த சைம்ஸ் டக் அவுட் ஆனார்.

கடைசி கட்டத்தில் மெக்கன்ஸ் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை சரமாரியாக உயர்த்தினார். 28 பந்துகளில் 1 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்த அவர் 46 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஹைவல்டு லயன்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 139 ரன்களை எடுத்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் உமேஷ் யாதவ் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

140 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை விரட்டிய டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு துவக்க வீரர் ஷேவாக், டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். சற்றுநேரம் நிலைத்து ஆடிய டேவிட் வார்னர் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அதன்பிறகு ஒரு முனையில் கெவின் பீட்டர்சன் பொறுமையாக ஆடினார். ஆனால் மற்றொரு புறம் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்து கொண்டே இருந்தது. உன்முக் சந்த்(9), இர்பான் பதான் (1), கேப்டன் ரோஸ் டெய்லர்(1), நமன் ஓஜா (7), நெகி (0) என்று வரிசையாக விக்கெட்கள் சரிந்தன.

அணியின் வெற்றிக்காக கடைசி வரை போராடிய பீட்டர்சன் 1 சிக்ஸ் 3 பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்து அவுட்டானார். கடைசியில் கட்டத்தில் மோனி மார்கல் அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு முயன்றார். ஆனால் பந்துகள் மீதம் இல்லாத நிலையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணி 22 ரன்களில் தோல்வியை தழுவியது

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 9 விக்கெட்களை இழந்து 117 ரன்களை எடுத்தது. மோனி மார்கல் 18 ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அரையிறுதி போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்திய ஹைவல்டு லயன்ஸ் அணி இறுதி போட்டிக்கு நுழைந்தது.

English summary
Highveld Lions beat Delhi Daredevils by 22 runs in the Champions League 2012. Delhi batsmen struggled to chase 140 target in the match. Pieterson is only player who reach half century in the team.
கருத்தை எழுதுங்கள்