Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ரஞ்சி கோப்பை பயிற்சிக்காக பார்முலா ஒன் கார் பந்தயத்தை துவக்கி வைக்க சச்சின் மறுப்பு

Posted by:
Published: Friday, October 26, 2012, 15:17 [IST]
 

ரஞ்சி கோப்பை பயிற்சிக்காக பார்முலா ஒன் கார் பந்தயத்தை துவக்கி வைக்க சச்சின் மறுப்பு
 

நொய்டா: கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக ஆட போவதாக அறிவித்துள்ளார் சச்சின். அதற்காக இந்தியன் பார்முலா ஒன் போட்டியை துவக்கி வைக்க கிடைத்த வாய்ப்பை சச்சின் ஏற்க மறுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்(39). கடந்த 23 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் ஆடி வரும் இவர், சமீபகாலமாக சொற்ப ரன்களில் அவுட்டாகி வருகிறார். இதனால் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பைக்கான போட்டியில் ஆட போவதாக முடிவு செய்துள்ளார்.

இதன்மூலம் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு, அடுத்து வரும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக ஆட சச்சின் முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் வரும் 28ம் தேதி கிரேட் நொய்டா நகரில் இந்தியன் பார்முலா ஒன் கார் பந்தயம் போட்டி துவங்க உள்ளது.

கடந்த ஆண்டு துவக்கப்பட்ட இந்தியன் பார்முலா ஒன் கார் பந்தயத்தை சச்சின் துவக்கி வைத்தார். அதேபோல இந்த ஆண்டும் கார் பந்தயத்தை சச்சின் துவக்கி வைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் சச்சின் அதற்கான அழைப்பை ஏற்க மறுத்துள்ளார்.

அடுத்த மாதம் (நவம்பர்) 2ம் தேதி ரஞ்சி கோப்பை தொடரில் ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி ஆட உள்ளது. இதில் சச்சினும் களமிறங்க உள்ளதால், தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் சச்சின், பார்முலா ஒன் பந்தயத்தின் துவக்க விழாவிற்கு செல்ல மறுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து சச்சினுக்கு பதிலாக விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேக்கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் கார் பந்தயத்திற்கு கொடியை அசைத்து துவக்கி வைக்க உள்ளார்.

மேலும் பல பிரபலங்களும் பார்முலா ஒன் போட்டியை காண வர உள்ளனர். நுரையீரல் புற்றுநோயில் இருந்து குணமாகி தற்போது மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள யுவராஜ், இலங்கை அதிரடி பேட்ஸ்மேன் சங்கக்காரா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், அவரது மனைவியும் இந்திய டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சா ஆகிய விளையாட்டு துறையை சேர்ந்த பிரபலங்கள் வர உள்ளன. மேலும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகை சோனாக்ஷி சின்ஹா ஆகிய சினிமா நட்சத்திரங்களும் வர உள்ளனர்.

English summary
Sachin Tendulkar, who waved the chequered flag at the inaugural Indian Grand Prix, will miss the second edition of the Formula One race to play a Ranji match for his Mumbai team.
கருத்தை எழுதுங்கள்