Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து சதமடித்தால் தான் நல்ல பேட்ஸ்மேனா?: கம்பிர் கேள்வி

Posted by:
Published: Saturday, October 27, 2012, 9:13 [IST]
 

டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து சதமடித்தால் தான் நல்ல பேட்ஸ்மேனா?: கம்பிர் கேள்வி
 

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் பொறுப்பாக ஆடுவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார் கம்பிர். சர்வதேச அளவில் சிறப்பாக ஆடிவரும் துவக்க ஜோடிகளில் நாங்கள் இடம் பெற்றுள்ளோம், சதமடித்தால் மட்டுமே நல்ல பேட்ஸ்மேன்கள் என்று கருத முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் டெஸ்ட் போட்டிகளில் ஷேவாக், கம்பிர் ஜோடி, துவக்க வீரர்களாக களமிறங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இருவரும் ரன் சேர்ப்பதில் மந்தமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் துவக்க ஜோடியில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் ஷேவாக் மற்றும் கம்பிர் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள கம்பிர், சர்வதேச அளவில் சிறப்பாக ஆடிவரும் துவக்க ஜோடிகளில் நாங்கள் இடம் பெற்றுள்ளோம். மேலும் ஒரு சிறந்த வீரர், அனைத்து போட்டிகளில் சதமடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

துவக்க வீரர்களாக களமிறங்கும் நாங்கள் 53 ரன்கள் சராசரியை வைத்துள்ளோம். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இது ஒரு சிறந்த சராசரி என்று நான் நினைக்கிறேன். மேலும் எங்களை போல நீண்டகாலமாக துவக்க ஜோடியாக ஆடி வரும் வீரர்கள் இடையே 53 ரன்கள் சராசரி இருப்பது அவ்வளவு எளிதல்ல.

இதைவிட இன்னும் சிறப்பான சராசரியை எட்டுவது எப்படி என்பது தெரியவில்லை. சர்வதேச அளவில் துவக்க ஜோடிகள் 50 ரன்கள் சராசரியை கொண்டிருப்பதே மிகவும் அரிது.

துவக்க வீரராக களமிறங்கும் பேட்ஸ்மேன்கள், எல்லா போட்டிகளிலும் சதமடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. துவக்க வீரராக களமிறங்கி அணிக்கு சிறப்பான துவக்கம் அளிக்க வேண்டும் என்பது தான் முக்கியம். இந்திய அணியில் நான் மட்டும் சதமடிக்க தவறியது போல பேசப்படுகிறது. என்னை போல பலரும் சதமடிக்காமல் உள்ளனர். எனவே என்னை குற்றம் கூறுபவர்கள், மற்றவர்களின் புள்ளிவிபரங்களையும் பார்க்க வேண்டும்.

சதமடிப்பது குறித்து மட்டுமே மக்கள் பேசி கொண்டிருந்தால், தென் ஆப்பிரிக்காவில் நான் அடித்த 93 ரன்களுக்கும், ஆஸ்திரேலியாவில் எடுத்த 85 ரன்களுக்கும் அர்த்தம் இல்லையே. துவக்க வீரராக இறங்கும் நபர், அணியின் தேவையை அறிந்து ரன் பங்களிப்பது தான் முக்கியம்.

கடந்த 24 ஒருநாள் போட்டிகளில் ஆடிய நான் 1100 ரன்களுக்கு மேலாக எடுத்துள்ளேன். இதை வைத்து கொண்டு மக்கள் கணக்கு போடுகின்றனர். ஒருநாள், டுவென்டி20, டெஸ்ட் போட்டிகள் இடையே வேறுபாடு உள்ளது. 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரே மாதிரியாக ஆடுவது முடியாத காரியம்.

இந்திய அணியில் எனக்கு வாய்ப்பு பறிப்போகும் நிலை எதுவும் ஏற்படவில்லை. துவக்க வீரராக களமிறங்கினால் அணிக்கு சிறந்த துவக்கத்தை அளிப்பது தான் வேலை. அதை நாங்கள் சிறப்பாக தான் செய்து வருகிறோம் என்றார்.

English summary
Gautam Gambhir hit back at critics who have raised doubts on the future of his opening combination with Virender Sehwag following their recent form slump, saying with an average of 53 they are still the best in the country.
கருத்தை எழுதுங்கள்