Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் பாணியில் பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் நடத்த திட்டம்: சாகா அஷ்ரப்

Posted by:
Published: Saturday, October 27, 2012, 11:48 [IST]
 

ஐபிஎல் பாணியில் பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் நடத்த திட்டம்: சாகா அஷ்ரப்
 

லாகூர்: இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை போல, பாகிஸ்தானிலும் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்த முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சாகா அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டிகளில் மிகவும் பிரபலமானது ஐபிஎல் தொடர். ஆண்டுத்தோறும் நடைபெறும் இத்தொடரில், உள்ளூர் வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இதனால் சர்வதேச அளவில் ஐபிஎல் தொடருக்கு பெரும் வரவேற்பு உண்டு.

ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறந்த இளம் வீரர்களை தேர்வு செய்வது எளிதாகிறது. எனவே அதேபோல மற்ற நாடுகளிலும் பிரிமியர் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் நடத்தின.

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடர், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சாகா அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

பாகிஸ்தான் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை நடத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்துள்ளது. எனவே இது குறித்து பாகிஸ்தான் அதிபர் அசீப் அலி சர்தாரியிடம் அனுமதி பெற விண்ணப்பித்துள்ளேன்.

பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடரின் மூலம் வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் அதிகரிக்கும். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சிறந்த பெயரையும் பெற்று தரும். எனவே இதற்கு வரி விலகு அளிக்குமாறு, பாகிஸ்தான் அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

ஐபிஎல் தொடர் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. எனவே அதற்கு 2 வாரங்களுக்கு முன்னதாக பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடரை நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனங்களின் முதலீடு செய்ய எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் கோடிக்கான ரூபாய் பணபுழக்கமும், தொடர் விரைவில் பிரபலமும் அடையும். ஷியால்கோட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒரு அணியின் உரிமையை வாங்கலாம் என்று தெரிகிறது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் கூட, ஒரு அணியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் பாணியை பின்பற்றியே, பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடர் நடத்தப்பட உள்ளது என்றார்.

English summary
PCB chairman Zaka Ashraf told that the Pakistan Premier League (PPL) will be played in March 2013 and a request has already been made to the chief patron of the board, President Asif Ali Zardari to allow a five-year tax exemption for the event.
கருத்தை எழுதுங்கள்