Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்தியாவிற்கு வர பாகிஸ்தான் அணிக்கு 'பச்சை கொடி'-டிசம்பர் 22ம் தேதி வருகிறது

Posted by:
Published: Wednesday, October 31, 2012, 12:44 [IST]
 

இந்தியாவிற்கு வர பாகிஸ்தான் அணிக்கு 'பச்சை கொடி'-டிசம்பர் 22ம் தேதி வருகிறது
 

டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் எப்போது என்று எதிர்பார்த்து கொண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. வரும் டிசம்பர் மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வர உள்ளது.

கிரிக்கெட் உலகில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி என்றாலே அதிக எதிர்பார்ப்பு கொண்டது. இந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவு முறிந்தது.

அதன்பிறகு இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் நடத்திய பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு, மீண்டும் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணிக்கு ஏற்கனவே இந்த ஆண்டு அதிக அளவில் போட்டிகள் இருப்பதால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் அதிக இடைவெளி கிடைக்கும் நேரத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி, வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடும் வகையில் நாடு திரும்ப உள்ளனர்.

இந்த இடைவெளி நாட்களில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை போட்டிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சரகம் அனுமதி அளித்துள்ளது. எனவே வரும் டிசம்பர் மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

அப்போது இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2 டுவென்டி20 போட்டிகள் நடைபெற உள்ளதாக தெரிகிறது. ஆனால் போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் தேதி ஆகியவை இன்னும் அறிவிக்கப்படவில்லை. டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பாகிஸ்தான் அணியின் சுற்றுப்பயண தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு அணி கிரிக்கெட் வாரியங்களும் இது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. கடந்த 2007ம் ஆண்டிற்கு பிறகு பாகிஸ்தான் அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Pakistan cricket team will tour India for three One Day Internationals and two Twenty20 Internationals in the months of December and January.
கருத்தை எழுதுங்கள்