Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடத்துவது ஒத்து வராது: பிசிசிஐ எதிர்ப்பு

Posted by:
Published: Friday, November 2, 2012, 10:40 [IST]
 

பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடத்துவது ஒத்து வராது: பிசிசிஐ எதிர்ப்பு
 

மும்பை: டெஸ்ட் போட்டிகளை பகல்-இரவு போட்டியாக நடத்துவதில் பல சிரமங்கள் உள்ளதால், அதை நடத்த முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சர்வதேச அளவில் ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகள் பகல்-இரவு போட்டிகளாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகள் பகலில் மட்டுமே நடத்தப்படுகிறது. எனவே டெஸ்ட் போட்டிகளையும், பகல்-இரவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக இருந்து வந்தது.

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) ஆலோசித்து, அதற்கு அனுமதி அளித்தது. இதன்மூலம் கிரிக்கெட் ரசிகர்களை கவரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் நடத்த, போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளும் ஒப்பு கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஐசிசி வலியுறுத்தியது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ), பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி ரத்னகர் ஷெட்டி கூறியதாவது,

டெஸ்ட் போட்டிகளை சோதனை முறையில் பகல்-இரவு போட்டியாக நடத்தி பார்த்தோம். ஆனால் அதில் எதிர்ப்பார்த்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை. எனவே அந்த திட்டத்தை நாங்கள் கைவிட்டோம் என்றார்.

கடந்த 1997ம் ஆண்டு 5 நாட்கள் கொண்ட ரஞ்சி கோப்பைக்கான இறுதி போட்டியில் மும்பை, டெல்லி அணிகள் மோதின. குவாலியரில் நடைபெற்ற இப்போட்டி பகல்-இரவு போட்டியாக நடத்தப்பட்டது. ஆனால் போட்டியின் இடையே அதிக பனி பொழிவு மற்றும் அவ்வப்போது பந்துகளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதால், பந்துவீ்ச்சாளர்கள் பந்துவீச திணறினர்.

மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 630 ரன்களை குவித்தது. அதேபோல டெல்லி அணி, போட்டியின் கடைசி நாளில் 559 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எனவே போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

போட்டியில் வெள்ளை நிற பந்துவீசப்பட்டதால், பீல்டர்களால் பந்து எங்கே வருகிறது என்பதை பார்க்க முடியாமல் திணறினர். எனவே பகல்-இரவாக டெஸ்ட் போட்டிகள் நடத்துவது வீரர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிகிறது.

ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள், ஐசிசியின் முடிவை வரவேற்று உள்ளது.

English summary
The International Cricket Council has allowed its member boards to organise day-night Test matches, but the Board of Control for Cricket in India doesn't seem to be in favour of it.
கருத்தை எழுதுங்கள்