Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்தியாவில் கிரிக்கெட் தொடர்: 5,000 பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மட்டுமே விசா?

Posted by:
Published: Saturday, November 3, 2012, 14:28 [IST]
 

இந்தியாவில் கிரிக்கெட் தொடர்: 5,000 பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மட்டுமே விசா?
 

டெல்லி: இந்தியாவில் நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் போட்டிகளை பார்க்க வரும் பாகிஸ்தான் ரசிகர்களில் 5,000 பேருக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2007ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் அணி, இங்கு 2 டுவென்டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி வரும் டிசம்பர் மாதம் 25ம் தேதி துவங்க உள்ளது.

2 டுவென்டி20 போட்டிகள் பெங்களூர் மற்றும் ஆமதாபாத் நகரங்களில் நடைபெற உள்ளது. 3 ஒருநாள் போட்டிகள் சென்னை, கொல்கத்தா, டெல்லி நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் நடைபெற உள்ளதால், இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் இடையே போட்டிகளை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை காண வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களில் 5 ஆயிரம் பேருக்கும் மட்டுமே விசா வழங்கப்படலாம் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் கடந்த காலங்களில் பாகிஸ்தானை சேர்ந்த அதிக அளவு ரசிகர்களுக்கு கிரிக்கெட் போட்டிகளை பார்க்க விசா வழங்கப்பட்டது. இதன்மூலம் இந்தியாவிற்கு வந்த பலரும், சொந்த நாடுகளுக்கு திரும்பவில்லை. இதனால் இந்த முறை மத்திய அரசு விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு ஏஜென்ஸிகள் கொண்ட குழுவின் ஆலோசனை கூட்டம் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, அனைத்து போட்டிகளை பார்க்க விசா வழங்கலாமா? அல்லது ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியாக வழங்கலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்படும். அதன்பிறகு இது குறித்த இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் ரசிகர்களின் போர்வையில் இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் நுழைய வாய்ப்புள்ளதால், கடும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விசா வழங்குவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்ட பிறகு, இது குறித்து உள்துறை அமைச்சரகம், தமிழகம், மேற்குவங்கம், கர்நாடகம், குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாநில அரசுகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது.

English summary
India is likely to issue 5,000 visas to Pakistani spectators to watch the Indo-Pak cricket series beginning December 25 but after framing stricter guidelines this time as several of them did not return home after watching such matches in the past.
கருத்தை எழுதுங்கள்