Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு!

Posted by:
Published: Monday, November 5, 2012, 14:02 [IST]
 

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு!
 

மும்பை: இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் புற்றுநோயில் இருந்து குணமடைந்த யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல அனுபவ சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி, இங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் தேர்வு இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் தேர்வு குழுவின் தலைவர் சந்தீப் பட்டேல், தலைமையிலான குழு ஆலோசித்து அணியை தேர்வு செய்தது. கூட்டத்தில் இந்திய கேப்டன் டோணியும் கலந்து கொண்டார்.

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி அகமதாபாத்தில் துவங்க உள்ளது. இந்த நிலையில் இந்திய அணிக்கு வழக்கம் போல டோணி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் மற்றும் பார்ம் இல்லாமல் தவித்த துவக்க வீரர் ஷேவாக், மற்றொரு துவக்க வீரர் கம்பிர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஜாகிர் கான் வழக்கம் போல அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுழல்பந்துவீச்சு துறையில் அனுபவ வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இளம்வீரர்கள் அஸ்வின், பிரக்யன் ஓஜா ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக சிறப்பாக பேட்டிங் செய்து வரும் விராத் கோஹ்லி தனது இடத்தை அணியில் உறுதி செய்துள்ளார். இளம்வீரர்களாக ரஹானே, புஜாரா, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சுமார் ஒரு வருடமாக இந்திய டெஸ்ட் அணியில் இல்லாமல் இருந்த ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கிற்கு, மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. தமிழக வீரர் முரளி விஜய், தனது ஆட்டத்தை நிரூபிக்க டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அதிகம் சோபிக்காத சுரேஷ் ரெய்னா, அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய டெஸ்ட் அணி விபரம்:

டோணி (கேப்டன்), ஷேவாக், கம்பிர், புஜாரா, சச்சின், விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், ஜாகிர்கான், பிரக்யன் ஓஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், ரஹானே, முரளி விஜய், ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா.

English summary
Yuvraj Singh will get a chance to play a Test for India after almost a year as the national selectors included him in the squad for the first England Test which starts in Ahmedabad on November 15.
கருத்தை எழுதுங்கள்