Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

வார்னி, எனக்கு டென்ஷனா இருக்கு, நீ முதல்ல பேசு...!

Posted by:
Published: Wednesday, November 7, 2012, 15:31 [IST]
 

வார்னி, எனக்கு டென்ஷனா இருக்கு, நீ முதல்ல பேசு...!
 

மும்பை: கிரிக்கெட் ஜாம்பவான் சர் டான் பிராட்மேனை முதல் முறையாக சந்தித்தபோது நடந்த சுவாரஸ்யமான அனுபவத்தை கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

ஆஸ்திரேலியாவின் உயரிய கெளரவமான ஆர்டர் ஆப் தி ஆஸ்திரேலியா சச்சினுக்கு நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய அமைச்சர் சிமோன் கிரீன் இதை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய சச்சின், பிராட்மேனை சந்தித்தபோது நடந்த சுவாரஸ்யமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

பிராட்மேனே என்னை சந்திக்க வேண்டும், எனது 90வது பிறந்த நாளில் நீ வந்து வாழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது எனக்கு பெரும் கெளரவமாக அமைந்தது. அப்போது நான் சென்னையில் பயிற்சி முகாமில் இருந்தேன். இருப்பினும் கிரிக்கெட் வாரியம் பெரியமனதுடன் என்னை அனுப்பி வைத்தது.

நானும், ஷான் வார்னும்தான் பிராட்மேனைப் பார்க்கப் போனோம். ரெண்டு பேருக்குமே செம டென்ஷன். பதட்டமாக இருந்தது. எப்படி அவரிடம் பேசுவது என்று தெரியவில்லை. காரில் போகும்போது வார்னுடன் இதுகுறித்து நான் பேசிக் கொண்டேன். வார்னி, இது உங்களது சந்தர்ப்பம். நீங்கள் ஒரு ஆஸ்திரேலியர். எனவே பிராட்மேனைப் பற்றி உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். எனவே நீங்க முதலில் ஆரம்பிங்க, அப்புறம் நான் தொடர்ந்து கொள்கிறேன் என்று கூறினேன்.

பிறகு பிராட்மேனை அவரது வீட்டில் சந்தித்தபோது அவரது எளிமையைப் பார்த்தும், தோற்றத்தைப் பார்த்தும் நான் அப்படியே ஆச்சரியமாகி விட்டேன். அவருக்கு மிகப் பக்கத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். எனக்கு என்னையே நம்ப முடியவில்லை. எங்களை நிறையப் பேச விட்டார். ஆனால் நாங்களோ அவர் சொல்வதை கேட்கவே ஆவலாக இருந்தோம்.

பிராட்மேன் பேசப் பேச நாங்கள் பேசா மடைந்தையாகி நின்றிருந்தோம். கிரிக்கெட் குறித்து நிறையப் பேசினார். அவரது காலத்து கிரிக்கெட் குறித்துப் பேசினார். முன்பு இருந்ததை விட இப்போது கிரிக்கெட்டின் தரம் கூடியிருப்பதாக அவர் கூறினார்.

கடைசியாக கிளம்பும்போது ஒரு கேள்வியைக் கேட்டோம். நீங்கள் ஆடிய காலத்தில் உங்களது டெஸ்ட் சராசரி 99.94 ஆக இருந்தது. ஒரு வேளை இப்போது ஆடியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கேட்டோம். அதற்கு அவர் சிரித்தபடி 70 இருக்கலாம் என்றார். பிறகு தொடர்ந்து ஏன் 99.94 ஆக கூட இருந்திருக்கலாம் என்றார் பலமாக சிரித்தபடி.

அந்த சந்திப்பை, அனுபவத்தை அவ்வளவு சுலபமாக என்னால் மறந்து விட முடியாது என்றார் சச்சின் சிலிர்ப்புடன்.

சச்சினின் 90வது பிறந்தநாளில் அவரை சந்திக்கப் போகும் கிரிக்கெட் புலி யாரோ...??

English summary
After receiving the Order of Australia honour from Simon Crean, Australia's Minister for Regional Australia, Regional Development and Local Government and Minister of Arts in Mumbai on Tuesday, Sachin Tendulkar shared his experience playing in Australia and meeting the Australian great Sir Donald Bradman.
கருத்தை எழுதுங்கள்