Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

நாளை முதல் டெஸ்ட்... இங்கிலாந்தை எப்படி சமாளிக்கப் போகிறதோ இந்தியா?

Posted by:
Published: Wednesday, November 14, 2012, 16:15 [IST]
 

அகமதாபாத்: பழிக்குப் பழிவாங்கும் தொடர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளதால் கூடுதல் சுமையுடன் நாளை தனது முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய கிரிக்கெட் அணி அகமதாபாத்தில் சந்திக்கிறது. ஆனால் பயிற்சி ஆட்டத்தின்போது முக்கிய இங்கிலாந்து வீரர்கள் ஆடிய விதத்தைப் பார்க்கும்போது நிச்சயம் இந்தியாவுக்கு சோதனையான நாட்கள் காத்துக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாத வாக்கில் இங்கிலாந்துக்குப் போன இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் என சகட்டுமேனிக்கு இங்கிலாந்திடம் உதை வாங்கியது. டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்று இந்தியாவை வெள்ளையடித்து அனுப்பியது.

நாளை முதல் டெஸ்ட்... இங்கிலாந்தை எப்படி சமாளிக்கப் போகிறதோ இந்தியா?
இந்தத் தோல்வியால் இந்திய அணியும், அதன் வீரர்களும் கடும் விமர்சனத்துக்குள்ளானார்கள். அந்தத் தொடரில் டிராவிட் மட்டுமே சற்று ஆடினார், அனுபவத்தை வெளிப்படுத்தி திறமையை பளிச்சிட்டுக் காட்டினார். மற்றவர்கள் சொதப்பினார்கள்.

இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது.

இந்தத் தொடரில் இந்தியா பழிவாங்கும் வகையில் நான்கு போட்டிகளிலும் இங்கிலாந்தை தோற்கடிக்கும் என்ற பெருத்த நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால் அது சாத்தியமா என்பதுதான் தெரியவில்லை.

இங்கிலாந்து அணி, இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்று 28 வருடங்களாகிறது. அதை இங்கிலாந்து அணி மாற்றி அமைக்குமா என்பதும் சந்தேகம்தான். காரணம், இந்தியாவில் இந்தியாவை வீழ்த்துவது என்பது பெரும் சவாலான விஷயமாகும்.

இங்கிலாந்தின் சில முன்னணி பந்து வீச்சாளர்கள் காயமடைந்துள்ளனர். குறிப்பாக ஸ்டீவன் பின் காயமடைந்துள்ளார்.

அதேபோல இந்தியத் தரப்பிலும் இஷாந்த் சர்மாவுக்கு காய்ச்சல் அடிக்கிறது. அவர் நாளைய போட்டியில் பங்கேற்பது சந்தேகம்தான். ஜாகிர்கானும், உமேஷ் யாதவும் இடம் பெறுவது உறுதி.

இந்தியாவைப் பொறுத்தவரை வழக்கம் போல சுழற்பந்துதான் முக்கிய அம்சமாக திகழும். ஆர்.அஸ்வின் செய்யப் போகும் மாயாஜாலத்தைத்தான் டோணி முழுமையாக நம்பியிருக்கிறார். அவரும் கலக்கப் போவதாக கூறி வருகிறார். அதேபோல பிரக்யான் ஓஜாவும் இந்தியாவுக்குக் கை கொடுப்பார் என்று நம்பலாம். ஹர்பஜன் சிங்கும் இருக்கிறார்.

இவர்கள் மூவரில் அஸ்வினும், ஓஜாவும் இந்தியாவுக்காக சில போட்டிகளே ஆடியிருந்தாலும் கூட கொடுக்கப்பட்ட போட்டிகளில் கலக்கியவர்கள் என்ற பெருமைக்குரியவர்களாக உள்ளதால், இவர்களை நம்பி களம் இறங்க முடியும்.

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த இரண்டு டெஸ்ட் தொடரிலும் அஸ்வின் தொடர் நாயகன் விருதை வென்றவர் ஆவார். அதேபோல ஓஜாவும் சிறப்பாக ஆடியுள்ளார்.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை கெவின் பீட்டர்சன் முக்கிய வீரராகத் தெரிகிறார். அதேபோல கேப்டன் அலிஸ்டைர் குக், ஜோனதான் டிராட், இயான் பெல், சமித் படேல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இவர்களில் பெல்லைத் தவிர மற்ற அனைவருமே பயிற்சிப் போட்டிகளில் சதம் அடித்துள்ளனர் என்பது இந்தியாவுக்கு நிச்சயம் பெரிய எச்சரிக்கைதான்.

இவர்கள் அஸ்வின் மற்றும் ஓஜாவை சமாளிக்கும் விதத்தில்தான் இங்கிலாந்து வீழுமா அல்லது மீளுமா என்பதைச் சொல்ல முடியும்.

இந்திய டெஸ்ட் அணியில் பேட்டிங் பெரும் பின்னடைவில்தான் உள்ளது. டிராவிட் இல்லை, விவிஎஸ் லட்சுமணன் இல்லை. இருவரும் ஓய்வு பெற்று விட்டனர்.

வீரேந்திர ஷேவாக்கும், கெளதம் கம்பீரும் நல்ல அடித்தளம் அமைத்தாக வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் இருவருமே நல்ல பார்மில் இருப்பதாக கூற முடியாது. இருவரும் சதம் போட்டு ரொம்ப நாட்களாகி விட்டது. அனுபவத்தை மட்டுமே நம்பி இருவரும் ஆட வேண்டிய நிலையில் உள்ளனர்.

ஜேம்ஸ் ஆண்டர்சன், டிம் பிரஸ்னன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரை இவர்கள் சமாளித்து ஆடி நின்று விட்டாலே போதும், பின்னால் வருகிறவர்கள் சமாளித்து ஆடி விட முடியும்.

விராத் கோஹ்லி நல்ல பார்மில் உள்ளார். அதேபோல சட்டேஸ்வர் பூஜாராவும் ரஞ்சி அனுபவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட முனைவார் என்று எதிர்பார்க்கலாம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாளை யுவராஜ் சிங்கும் களம் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களைப் போலவே, இங்கிலாந்தின் கிரீம் ஸ்வானும் பயமுறுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் ஸ்வான் தனது 200வது டெஸ்ட் விக்கெட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அதேபோல பார்ட் டைம் சுழற்பந்து வீச்சாளர் சமீத் படேலும் இந்திய வீரர்களுக்கு நெருக்கடி தர முனையலாம்.

அணிகள்

இந்தியா - டோணி, கம்பீர், ஷேவாக், சச்சின், கோஹ்லி, யுவராஜ் சிங், சட்டேஸ்வர் புஜாரா, ஆர்.அஸ்வின், உமேஷ் யாதவ், பிரக்யான் ஓஜா, ஜாகிர் கான், அஜிங்கியா ரஹானே, ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, முரளி விஜய், அசோக் திண்டா.

இங்கிலாந்து - அலிஸ்டைர் குக், ஜேம்ஸ் ஆண்டர்சன், இயான் பெல், டிம் பிரஸ்னன், நிக் காம்ப்டன், ஸ்டீவன் பின், சமீத் படேல், கெவின் பீட்டர்சன், மாட் பிரியர், கிரீம் ஸ்வான், ஜோனதன் டிராட், ஸ்டூவர்ட் பிராட், ஜோ ரூட், ஜானி பேர்ட்ஸ்டா, கிரஹாம் ஆனியன்ஸ், இயான் மார்கன், மான்டி பனீசர், ஸ்டூவர்ட் மீக்கர்.

English summary
Billed as the revenge series, India would aim to pay England back in the same coin when the two teams renew cricketing rivalry when they go into what promises to be an engrossing four-match Test rubber from Thursday. India had suffered a humiliating 0-4 series whitewash when they had visited England in July-August last year and would like to avenge the defeat on the back of its spinners in favourable home conditions. England have not won a Test series in India in nearly 28 years and reversing the trend would a tough job for the world number two team.
கருத்தை எழுதுங்கள்