Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 413 ரன்-2வது இன்னிங்ஸில் இந்தியா மோசமான பேட்டிங்!

Posted by:
Updated: Sunday, November 25, 2012, 17:38 [IST]
 

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 413 ரன்-2வது இன்னிங்ஸில் இந்தியா மோசமான பேட்டிங்!
 

மும்பை: மும்பையில் நடைபெற்று வரும் இந்தியா- இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 413 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பீட்டர்சன் 186 ரன்களையும் கேப்டன் குக் 122 ரன்களையும் குவித்து அந்த அணிக்கு வலுசேர்த்தனர்.

2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா, படு மோசமான பேட்டிங்கால் மடமடவென விக்கெட்களைப் பறி கொடுத்து தவித்துப் போனது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி, அகமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதைத் தொடர்ந்து மும்பையில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 327 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் குக் 87 ரன்களுடனும் பீட்டர்சன் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று காலை 3-வது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கேப்டன் குக் சதமடித்தார். 122 ரன்களை எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் டோணியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தொடர்ந்தும் பீட்டர்சன் ஆடி இரட்டை சதத்தை நோக்கி பயணித்தார். ஆனால் 186 ரன்களில் ஓஜா பந்தில் டோணியிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி வீரர்கள் சொற்ப ரன்களையே எடுக்க 413 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் அந்த அணி இழந்தது. இந்தியாவின் ஓஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஹர்பஜன்சிங் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இந்தியா தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்த இன்னிங்ஸ் இந்தியாவுக்கு பெரும் சோதனையாக அமைந்தது. முன்னணி வீரர்கள் சொதப்பி எடுத்து விட்டனர். கெளதம் கம்பீர் மட்டும் மிக மிக நிதானமாக ஆடி அரை சதம் போட்டு கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது பங்கு 53 ரன்கள்.

ஷேவாக் 9 ரன்களுடன் வெளியேறினார். அபாயகரமான பேட்ஸ்மேனான சட்டேஸ்வர் பூஜாரா 6 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.

சுத்தமாக பார்மில் இல்லாத சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார். விராத் கோஹ்லியை யார் டீமில் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. இந்த முறை இவரது ரன் குவிப்பு ஜஸ்ட் 7 ரன்கள்தான்.

யுவராஜ் சிங் 8, டோணி 6 என வெளியேறி விட்டனர். அஸ்வின் 11 ரன்களில் வெளியேறினார்.

ஹர்பஜன் சிங் அவுட்டாகாமல் ஒரு ரன் எடுத்துள்ளார். இன்றைய ஆட்டநேர இறுதியில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்களை எடுத்துள்ளது.

முதல் இன்னிங்ஸைப் போலவே இந்த இன்னிங்ஸிலும் மான்டி பனீசர் கலக்கி விட்டார். அவர் 5 விக்கெட்களைச் சாய்த்தார்.

Story first published:  Sunday, November 25, 2012, 10:43 [IST]
English summary
England Captain Alastair Cook and Kevin Pietersen both completed centuries early on day three of the second Test in Mumbai.
கருத்தை எழுதுங்கள்