Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

2 டெஸ்ட், 29 ரன்கள்தான்... ஏன் சச்சின்?

Posted by:
Published: Monday, November 26, 2012, 11:31 [IST]
 

2 டெஸ்ட், 29 ரன்கள்தான்... ஏன் சச்சின்?
 

மும்பை: முதல் டெஸ்ட் போட்டியிலும் சரியாக ஆடவில்லை. சொந்த ஊரான மும்பையில் முடிந்த 2வது டெஸ்ட் போட்டியிலும் சரியாக விளையாடவில்லை. சச்சின் டெண்டுல்கர் மீதான நெருக்கடியும், விமர்சனங்களும் மேலும் அதிகரிக்க இவை அமைந்துள்ளன. மும்பை டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் சச்சின் ஓய்வு குறித்த பேச்சுக்களும் மீண்டும் சூடாக கிளம்பியுள்ளன.

சச்சின் டெண்டுல்கர் குறித்துப் பேச ஆரம்பித்தாலே அவர் படைத்தா சாதனைகளைத்தான் அத்தனை பேரும் பெரிதாகப் பேசுகிறார்கள், பேச முடிகிறது. காரணம், சச்சின் படைத்துள்ள சாதனைகளின் தன்மை அப்படி. இந்த வயதிலும் அவர் சிறப்பாக ஆடி வருவதும் ஒரு சாதகமான அம்சமாக அவர் பக்கம் உள்ளது. 23 வருடமாக கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இத்தனை சிறப்பம்சங்கள் இருந்தாலும் கூட நெருக்கடியான தருணத்தில் அவர் அணிக்கு கை கொடுக்கத் தவறி விடுவது சமீப காலமாக வாடிக்கையாகி வருகிறது. என்னதான் சாதனை படைத்திருந்தாலும் கூட முக்கியமான தருணங்களில் அவரது பங்கு என்ன என்று பார்க்கும்போது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

உதாரணத்திற்கு நடப்பு இங்கிலாந்துத் தொடரை எடுத்துக் கொள்வோம். இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை இந்தத் தொடரை அவர்கள் பழிக்குப் பழிவாங்கும் தொடராகவே பார்க்கிறார்கள். காரணம், இங்கிலாந்துக்கு நாம் போயிருந்தபோது நம்மை சாத்து சாத்தென்று சாத்தி எடுத்து விட்டது இங்கிலாந்து அணி. மிகக் கேவலமாக நாம் ஆடியதைப் பார்த்து ரசிகர்கள் பொங்கிக் குமுறி விட்டனர்.

இந்த நிலையில் தற்போது இந்தியா வந்துள்ள இங்கிலாந்தையும் அதேபோல நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்கடித்து வெள்ளையடிக்க வேண்டும் இந்திய அணி என்பதே அத்தனை ரசிகர்களின் பேரார்வமாக இருந்தது. அதற்கேற்ப முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்ற விதம் ரசிகர்களை குஷிப்படுத்தியது, உற்சாகப்படுத்தியது.

ஆனால் மும்பையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி தோல்வியைச் சந்தித்து வெட்கித் தலை குணிந்து நிற்கிறது. இத்தனைக்கும் நமது பந்து வீச்சாளர்கள் பரவாயில்லை. ஆனால் பேட்டிங்தான் மிக மோசமாக போய் விட்டது. பந்து வீச்சிலும் கூட நாம் சற்று சுணங்கிப் போனதால் இங்கிலாந்தின் கை ஓங்கும் நிலை ஏற்பட்டு விட்டது.

இங்குதான் சச்சின் பற்றிப் பேச வேண்டியதாகிறது. முதல் டெஸ்ட் போட்டியிலும் சச்சின் பெரிதாக ஆடவில்லை. 2வது டெஸ்ட் போட்டியிலும் அவர் சொதப்பி விட்டார்.

மானத்தைக் காக்கும் டெஸ்ட் போட்டிகளாக ரசிகர்கள் பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு தொடரில் சச்சின் போன்ற சூப்பர் ஸ்டார் வீரர்கள் சொதப்பலாக ஆடினால் ரசிகர்களுக்கு எப்படி சந்தோஷம் வரும்...

முதல் டெஸ்ட் போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஸ்வான் பந்து வீச்சில் வீழ்ந்தார். 2வது இன்னிங்ஸில் அவர் பேட் செய்யவில்லை. இப்போட்டியில் சட்டேஸ்வர் பூஜாரா, ஷேவாக், அஸ்வின், பிரக்யான் ஓஜா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட் போட்டி சச்சின் சொந்த ஊரான மும்பையில் நடந்தது. இதிலாவது சச்சின் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இங்கும் சொதப்பி விட்டார் சச்சின். முதல் இன்னிங்ஸில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து பனேசர் பந்தில் வீழ்ந்தார். 2வது இன்னிங்ஸிலும் அதே ரன்கள்தான், அதே பனேசரிடம் வீழ்ந்தார்.

இந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் சச்சின் மொத்தம் 29 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இது ரசிகர்களை அதிர வைத்துள்ளது. மும்பை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ள இந்திய அணி.

இங்கிலாந்தின் கை ஓங்கிய நிலையி்ல் சச்சின் போன்ற முன்னணி வீரர்கள் பொறுப்புடனும், நிதானத்துடனும் ஆடி அணியை காக்கப் போராடியிருக்கலாமே என்ற ஆதங்கம் ரசிகர்களிடம் நிலவுகிறது.

சச்சின் சிந்திக்க வேண்டும்..இல்லாவிட்டால் டெண்டுல்கர் என்பதற்குப் பதில் 'என்டுல்கர்' என்று ரசிகர்கள் கூப்பிட ஆரம்பித்து விடுவார்கள்...!

English summary
Indian star batsman Sachin Tendulkar has once again failed to score in the test match against England in the Mumbai 2nd test.
கருத்தை எழுதுங்கள்