Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

3வது டெஸ்ட்டுக்கும் அதே இந்திய அணிதான்- 4வது போட்டிக்கான அணி பின்னர் அறிவிப்பு

Posted by:
Updated: Tuesday, November 27, 2012, 14:36 [IST]
 

3வது டெஸ்ட்டுக்கும் அதே இந்திய அணிதான்- 4வது போட்டிக்கான அணி பின்னர் அறிவிப்பு
 

மும்பை: முதல் டெஸ்ட்டில் சிறப்பாக வென்று, 2வது டெஸ்ட்டில் மோசமாக தோற்று நிற்கும் நிலையில், 3வது டெஸ்ட் போட்டிக்கான அணியை இன்று தேர்வாளர்கள் அறிவித்தனர். அதேசமயம், 4வது மற்றும் கடைசி போட்டிக்கான அணி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளது. முதல் போட்டியில் தடுமாறித் தோற்றாலும், 2வது போட்டியில் அபாரமாக ஆடி கரை சேர்நது விட்டது. பேட்டிங், பந்து வீச்சு ஆகியவற்றில் தனது திறமையை அது நிரூபித்து விட்டது. குறிப்பாக இந்தியாவின் வலிமையான ஆயுதமான சுழற்பந்து வீச்சைக் கொண்டே இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து விட்டது.

இதனால் இந்திய ரசிகர்கள் செம கடுப்பாக உள்ளனர். இங்கிலாந்தை ஒவ்வொரு போட்டியிலும் நையப்புடைத்து படு தோல்வி அடைய வைப்பார்கள் நமது வீரர்கள் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு 2வது போட்டியிலேயே இந்தியா வழக்கம் போல வழுக்கி விழுந்தது பெரும் எரிச்சலைக் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் கொல்கத்தாவில் 3வது போட்டியும், நாக்பூரில் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணித் தேர்வு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தேர்வாளர்கள் 3வது போட்டிக்கான அணியை மட்டுமே இன்று தேர்வு செய்தனர்.

மும்பையில் நடைபெற்ற இந்தத் தேர்வின்போது எதிர்பார்த்தது போலவே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வேகப் பந்து வீச்சாளர் அசோக் திண்டா மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்துள்ள உமேஷ் யாதவுக்குப் பதில் திண்டா வந்துள்ளார்.

4வது போட்டிக்கான அணி குறித்து கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் ஜெக்தாலே கூறுகையில், 4வது டெஸ்ட் போட்டி மற்றும் டுவென்டி 20 தொடருக்கான அணிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

அணி விவரம்

டோணி, கம்பீர், ஷேவாக், சச்சின், கோஹ்லி, யுவராஜ் சிங், சட்டேஸ்வர் பூஜாரா, ஆர்.அஸ்வின், அசோக் திண்டா, பிரக்யான் ஓஜா, அஜிங்கியா ரஹானே, ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, முரளி விஜய், ஜாகீர்கான்.

அணியில் எந்த மாற்றமும் செய்யாததால், ஓட்டை உடைசலான நிலையில், வெறும் சுழற்பந்து வீச்சை மட்டுமே நம்பிக் கொண்டு டிசம்பர் 5ம் தேதி தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கவுள்ளது இந்தியா.

Story first published:  Tuesday, November 27, 2012, 11:29 [IST]
English summary
The Indian squad for the third and fourth cricket Tests against England to be played in Kolkata and Nagpur will be picked on Tuesday, the BCCI said on Monday. "The selection committee meeting is to be held tomorrow (in Mumbai) to choose the teams for the next two Tests," informed Cricket Board's secretary and meeting convener, Sanjay Jagdale.
கருத்தை எழுதுங்கள்