Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண், பான்டிங்... சகாப்தங்களின் முடிவு!

Posted by:
Published: Friday, November 30, 2012, 13:24 [IST]
 

டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண், பான்டிங்... சகாப்தங்களின் முடிவு!
 

சென்னை: ராகுல் டிராவிட், பிறகு வி.வி.எஸ்.லட்சுமண், இப்போது ரிக்கி பான்டிங்... நிச்சயம் கிரிக்கெட்டுக்கு இது சோகமான காலம்தான். முப்பெரும் சகாப்தங்களின் முடிவாகவே இதை கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

ஒரே ஆண்டில் இரு நாடுகளைச் சேர்ந்த மூன்று முக்கிய, முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்றிருப்பது இரு நாட்டு கிரிக்கெட் அணிகளுக்கும் பெரும் நெருக்கடியான விஷயமாக மாறியுள்ளது. ரிக்கி பான்டிங் போனதால் ஆஸ்திரேலியாவுக்கு நிச்சயம் ஓரளவு இழப்புதான். அதேசமயம், டிராவிட், லட்சுமணின் ஓய்வால் இந்தியாவுக்குப் பேரிழப்பாக மாறியுள்ளது.

டிராவிடின் ஓய்வால் இந்திய அணி நிச்சயம் பெரும் நஷ்டத்தையே சந்தித்திருக்கிறது. அவருக்குப் பதில் இவர் என்று டிவி சீரியல்களில் கார்டு போடுவதைப் போல, யாரையும் டிராவிடுக்குப் பதில் காட்ட முடியவில்லை நமது தேர்வாளர்களால். சட்டேஸ்வர் பூஜாரா இப்போதுதான் விளையாட ஆரம்பித்துள்ளார். அவர் தனது திறமையை நிரூபித்து ஆணித்தரமாக இடத்தைப் பிடிக்கும்போதுதான் அடுத்து டிராவிட் இவர்தானா என்ற வாதத்திற்கே நம்மால் வர முடியும்.

அதேபோலத்தான் வி.வி.எஸ்.லட்சுமணும். இவரது ஓய்வும் கூட இந்திய அணியில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. டிராவிடும், லட்சுமணும் இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பாக திகழ்ந்தவர்கள். பலநெருக்கடியான தருணங்களில் கை கொடுத்த ஆபத்பாந்தவான்கள். இங்கிலாந்து தொடரின்போது டிராவிட் மட்டும் இல்லையென்றால் நமது அணியின் நிலை படு கேவலமாக போயிருக்கும்.

இப்படி திடீர் நெருக்கடியில் அணிகள் சிக்குவது இது முதல் முறையல்ல. முன்பு மேற்கு இந்திய்த தீவுகள் அணியின் சூப்பர் ஸ்டார் பிரையன் லாரா ஓய்வு பெற்றபோது கூட அந்த அணி நடுக்காட்டில் விடப்பட்ட கைக்குழந்தை போல பரிதவித்துப் போனதை உலகமே பார்த்தது. ஆனால் ஷிவ்நரைன் சந்தர்பால் மூலமாக அந்த அணிக்கு சற்று புத்துயிர் கிடைத்தது.

அதேபோல இலங்கை அணியிலிருந்து அரவிந்த டிசில்வா வெளியேறியபோது மஹளா ஜெயவர்த்தனே மூலம் உயிர் கிடைத்தது அந்த அணிக்கு.

ஆனால் டிராவிட், லட்சுமணுக்குப் பதில் நம்மால் இன்னும் யாரையும் அடையாளம் காண முடியவில்லை என்பது கசப்பான உணமையாக உள்ளது. அதேபோல ரிக்கி பான்டிங்குக்கு இணையான ஒருவர் ஆஸ்திரேலிய அணியிலும் நிச்சயம் இல்லை. ஷான் வார்னே, மெக்கிராத் போன்றோரின் இழப்பையே இன்னும் அவர்களால் ஈடு கட்ட முடியவில்லை என்பதையும் நாம் மறந்து விட முடியாது.

ஆனால் சகாப்தங்களின் முடிவு என்பது நிச்சயம் இயல்பான, எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதான் என்பதால் இந்த ஓய்வுகளை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதேசமயம், இந்த இழப்புகளை சமாளிக்க, எதிர்கொள்ள நாம் முன்கூட்டியே தயாராக வேண்டியதும் மிக மிக முக்கியம். இதை கிரிக்கெட் வாரியங்களும், தேர்வாளர்களும் செய்யத் தவறும்போதுதான் லிஜென்டுகள் விலகும்போது இழப்பு ஏற்படுவதை நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் போகிறது, தடுமாறிப் போய் விடுகிறோம்.

இந்திய கிரிக்கெட் வாரியம் எப்போதும் இந்தத் தவறை செய்யத் தவறுவதில்லை. கபில் தேவுக்குப் பிறகு நம்மால் அருமையான ஒரு ஆல்ரவுண்டரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இன்று வரை நல்ல ஆல்ரவுண்டர் இந்திய அணியில் இல்லை என்பதே உணமை. ஆல்ரவுண்டர் இல்லாத அணி அப்பா, அம்மா இல்லாத அனாதை போல என்பதை இந்திய கிரிக்கெட் வாரியமும் சரி, தேர்வாளர்களும் சரி இன்றுவரை உணராமலேயே உள்ளனர். இந்த நொடி வரை, நாம் நல்ல ஆல்ரவுண்டரை உருவாக்கும் எந்த முயற்சியும் நாம் எடுத்தது போலத் தெரியவில்லை.

அதுபோலத்தான் நாளைக்கே சச்சின் ஓய்வு பெறுவதாக அறிவித்தால் நாம் நிச்சயம் திக்குமுக்காடிப் போய் விடுவோம். காரணம், சச்சினுக்கு ஈடான ஒருவரை நாம் இன்னும் அடையாளம் காணாமலேயே உள்ளோம். டிராவிட்டுக்கு இணையானவரையும் நாம் இன்னும் அடையாளம் காணவில்லை. லட்சுமணுக்கு இணையானவர் இன்னும் வந்தபாடில்லை.

இப்படி நாம் திக்கித் திணறிப் போக முக்கியக் காரணம் .. முக்கிய வீரர்களை கடைசி வரை சக்கையாய் பிழிந்தெடுத்து அவர்கள் போகும் வரை கை கட்டி வாய் பொத்தி உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பதுதான். இதுவே ஆஸ்திரேலியாவை பாருங்கள்.. ஒரு வீரருக்கு மாற்றாக இன்னொருவரை கூடவே உருவாக்க ஆரம்பித்து விடுவார்கள். அவர் இல்லாவிட்டால் இவர் என்று யாராவது ஒருவர் வந்து விடுவார். அதற்கேற்றபடி அவர்களது கிரிக்கெட் பயிற்சிகளும், முறைகளும் உள்ளன. நம்மிடம் அப்படி இல்லை.

சச்சினா... அவர் கடைசி வரை விளையாடட்டும். அவர் விளையாண்டு முடித்துப் போன பிறகு அடுத்தவர் குறித்துப் பார்த்துக் கொள்ளலாம் என்று உட்கார்ந்து கொண்டிருப்போம். இதுதான் நம்மிடம் உள்ள பிரச்சினை. முன்னணி வீரர்கள் ஒரு கட்டத்திற்கு வந்து விட்டார்களா, அடுத்த நொடியே அவரது வாரிசைத் தேட ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அதை நாம் செய்வதே இல்லை. இதுதான் முக்கியப் பிரச்சினை.

எப்படியோ, இந்த ஆண்டு கிரிக்கெட் உலகம் மூன்று முக்கிய வீரர்களுக்கு விடை கொடுத்து விட்டது... அவர்களின் வாரிசுகளை அடையாளம் காணாமலேயே...

English summary
The year has witnessed the retirements of three legendary cricketers which has created a huge void in the game of cricket as legendary cricketers, Ricky Ponting, VVS Laxman and Rahul Dravid have bid good-bye to the game. With the legends drawing curtains to their cricketing career the same year, Test cricket's golden era will come to an end rather shortly since a few more players who have been a part of this era are still serving the game.
கருத்தை எழுதுங்கள்