Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கொல்கத்தா கிரிக்கெட் டெஸ்ட்: மிக வலுவாக இங்கிலாந்து -509/6!

Posted by:
Updated: Friday, December 7, 2012, 17:51 [IST]
 

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெறும் 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 509 ரன்களைக் குவித்துள்ளது. முதல் இன்னிங்சில் இந்திய அணியைவிட 200 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது இங்கிலாந்து.

கொல்கத்தா கிரிக்கெட் டெஸ்ட்: மிக வலுவாக இங்கிலாந்து -509/6!
கொல்கத்தாவின் ஈடன் மைதானத்தில் நேற்று முன் தினம் 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் இரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று சமநிலையில் இருந்ததால் 3-வது போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக இரு அணிகளுக்குமே இருக்கிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கம்பீர், தெண்டுல்கர், கேப்டன் டோணி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இந்திய அணி கவுரமாக முதல் இன்னிங்சில் 316 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் நேற்று முதல் இன்னிங்சைத் தொடங்கிய இங்கிலாந்து அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் குக் சதமடித்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இன்று 3-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடி வரும் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளைப் பறிகொடுக்காமல் இருந்து வருகிறது. இங்கிலாந்தின் குக் இரட்டை சதத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். இன்று மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு மொத்தம் 296 ரன்களை எடுத்திருந்தது.

பின்னர் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் குக், 190 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரவ்ன் அவுட் ஆக இரட்டை சதத்தை எட்ட முடியாமல் வெளியேற நேரிட்டது. அவருடன் களத்தில் இருந்த ட்ரோட்டும் சதத்தை எடுக்க முடியாமல் 87 ரன்களில் வெளியேறினார்.

இன்றைய ஆட்ட நேரத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 509 ரன்களை எடுத்திருக்கிறது இங்கிலாந்து அணி. இந்திய அணியை விட முதல் இன்னிங்சிலேயே 200 ரன்கள் கூடுதலாக குவித்து மிக வலுவான நிலையில் இங்கிலாந்து அணி இருக்கிறது.

Story first published:  Friday, December 7, 2012, 11:54 [IST]
English summary
England were 296 for one in their first innings at lunch on the third day of the third cricket Test against India in Kolkata on Friday.
கருத்தை எழுதுங்கள்