Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கொல்கத்தா டெஸ்ட்: மீண்டும் தோற்கிறது .... படுகேவலமான இந்தியாவின் ஆட்டம்!

Posted by:
Updated: Saturday, December 8, 2012, 17:42 [IST]
 

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2வது இன்னிங்சை எவ்வளவு கேவலமாக விளையாட முடியுமோ அவ்வளவு மோசமாக இந்திய அணி விளையாடியிருக்கிறது. விக்கெட்டுகள் கைவசம் இல்லாத நிலையில் இங்கிலாந்து அணியைவிட 32 ரன்கள்தான் முன்னிலையில் இருக்கிறது இந்திய அணி.

கொல்கத்தா டெஸ்ட்: மீண்டும் தோற்கிறது .... படுகேவலமான இந்தியாவின் ஆட்டம்!
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நேற்றைய 3-வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 509 ரன்களை எடுத்திருந்தது.

4-வது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கிய சிறிது நேரத்திலேயே எஞ்சிய விக்கெட்டுகளை மளமளவென இங்கிலாந்து இழந்தது. இன்று 14 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்தது. 523 ரன்களை எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியைவிட தற்போது 207 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கிறது இங்கிலாந்து. இந்திய அணியின் ஓஜா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் பறித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. இந்திய அணியின் வீரர்கள் எவரும் குறிப்பிடும்படியாக ஆடவில்லை. கம்பீரும் ஷேவாக்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 86 ரன்கள் வரை இந்திய அணி மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் 86 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி 98 ரன்களில் அடுத்த விக்கெட்டையும் 103 ரன்களில் மற்றொரு விக்கெட்டையும் 107 ரன்கள் எடுத்த போது இன்னொரு விக்கெட்டையும் பறிகொடுத்தது.

இனியாவது எச்சரிக்கையாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்தால் 122 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பரிதாப நிலையில் இருந்தது இந்திய அணி. இந்திய அணியின் கம்பீர் 40, ஷேவாக் 49 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 8, தெண்டுல்கர் 5 என சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். கேப்டன் டோணியோ டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இதனால் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க பெரும் போராட்டத்தை நடத்தியது இந்திய அணி.பின்வரிசையில் நிலைத்து ஆடியவர் அஸ்வின் மட்டும்தான்! இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை அடைந்துவிடும் நிலையில் அஸ்வினின் அரைசதம்தான் இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றியது.

இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட்டுகள் கைவசம் இல்லாத நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் மொத்தம் 239 ரன்களை எடுத்திருக்கிறது. இங்கிலாந்து அணியைவிட மொத்தம் 32 ரன்கள்தான் கூடுதலாக எடுத்திருக்கிறது. விக்கெட்டுகள் எதுவும் இல்லாத நிலையில் 8 3 ரன்களுடன் களத்தில் நிற்கும் அஸ்வினால் எவ்வளவு ரன்களைக் குவிக்க முடிந்தாலும் இங்கிலாந்து அணி எளிதாக அந்த இலக்கை அடைந்துவிடக் கூடிய வாய்ப்புகள் இருப்பதால் இந்திய அணி சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வத்தான் காத்திருக்கிறது.

Story first published:  Saturday, December 8, 2012, 10:09 [IST]
English summary
England were all out for 523 in their first innings on the fourth day of the third cricket Test against India today
கருத்தை எழுதுங்கள்