Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

நாக்பூர் டெஸ்ட்: சபாஷ் சர்மா, ஜடேஜா! இங்கிலாந்து திணறியது- 199/5!

Posted by:
Updated: Thursday, December 13, 2012, 17:27 [IST]
 

நாக்பூர் டெஸ்ட்: சபாஷ் சர்மா, ஜடேஜா! இங்கிலாந்து திணறியது- 199/5!
 

நாக்பூர்: நாக்பூரில் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சினால் இங்கிலாந்து அணி விக்கெட்டுகள் மளமளவென சரிந்து திணறியது அந்த அணி. இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்திருக்கிறது.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் இந்த மகிழ்ச்சி அடுத்தடுத்த போட்டிகளில் நீடிக்கவில்லை. மும்பையில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் கொல்கத்தா போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அளவுக்குப் போய் பின்னர் தப்பி 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியைத் தழுவி கடும் விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கிறது இந்திய அணி.

இதனால் அணியில் இருந்து யுவராஜ்சிங், ஜாகீர்கான், ஹர்பஜன்சிங் ஆகியோர் நீக்கப்பட்டு ஜடேஜா, பியூஸ் சாவ்லா, அவானா ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். டோணியின் கேப்டன் பதவியும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இதேபோல் மூத்த வீரரான டெண்டுல்கர் உருப்படியாக ஆடாமல் ஏதோ சாட்சிக்கு நிற்பது போல் விளையாடி வருவதும் பலரையும் எரிச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது. பல முன்னாள் வீரர்களும் டெண்டுல்கர் ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். வாழ்வா?சாவா என்ற நிலையில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியிருக்கிறது.இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் ஹாட்ரிக் வெற்றி பெறும் நோக்கில் இருக்கிறது. இங்கிலாந்து அணி, இந்தியாவில் 1984-85-ல்தான் டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது. இன்றைய போட்டியில் வென்று தொடரை இங்கிலாந்து கைப்பற்றிவிட்டால் 28 ஆண்டுகளுக்கு பின் சரித்திரம் படைத்துவிடும் நிலை இருக்கிறது.

இன்று காலை போட்டி தொடங்கிய போது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் குக் மற்றும் காம்ப்டன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 4.2 வது ஓவரில் அந்த அணி 3 ரன்களை எடுத்திருந்த நிலையில் இஷாந்த் சர்மா வீசிய பந்தில் கேப்டன் டோணியிடம் கேட்ச் கொடுக்க அவுட் ஆனார் காம்ப்டன். அதிர்ச்சியில் உறைந்து போன இங்கிலாந்து அணிக்கு பேரிடியாக வந்தது 10.3 ஓவர். அந்த அணியில் அதிக ரன்களைக் குவிக்கக் கூடியவரான கேப்டன் குக், இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூவில் சிக்கி வெளியேறினார்.

2 விக்கெட்டுகளை அந்த அணி இழந்தபோது மொத்தம் 16 ரன்களைத்தான் எடுத்திருந்தது. அதன் பின்னர் ட்ராட்டும் பீட்டர்சனும் இணைந்து நின்று நிதானமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இருவரும் இங்கிலாந்தின் ஸ்கோரை 102 ஆக உயர்த்திய போது ட்ராட் அவுட்டாகினார். அதன் பின்னர் 119 ரன்களில் அடுத்த விக்கெட்டும் பறிபோக பீட்டர்சனும் அணியின் 139வது ரன்னில் வெளியேறினார்.

இன்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்திருக்கிறது இங்கிலாந்து அணி. இந்திய அணியின் இஷாந்த் சர்மாவும் ஜடேஜாவும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்திருக்கின்றனர்.

நாளைய ஆட்டத்திலும் இந்தியாவின் வேகமும் நிதானமும் தொடர்ந்தால் ரசிகர்கள் கொஞ்சமேனும் ஆறுதலடைவார்கள்!

Story first published:  Thursday, December 13, 2012, 9:34 [IST]
English summary
Alastair Cook has won the Toss and England will be batting first in Nagpur Test match.
கருத்தை எழுதுங்கள்