புனே: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்வியைத் தழுவியிருக்கும் இந்திய அணி நாளை 20 ஓவர் போட்டிக்காக மோதுகிறது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் கேப்டன் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்திய மண்ணில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை சாதனை படைத்தது இங்கிலாந்து.
இந்திய அணி தொடர் தோல்வியை சந்தித்து கடுமையான விமர்சனங்களை எதிர்நோக்கியிருக்கிறது. கேப்டன் பதவிக்கே டோணி லாயக்கே இல்லை எனறும் சாதனை வீரரான டெண்டுல்கர் ஓய்வை அறிவித்துவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாளை இங்கிலாந்து அணியுடன் 20 ஓவர் போட்டியில் இந்தியா மோதுகிறது. புனேயில் நடைபெறும் இப்போட்டி நாளை மாலை 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணியில் ஷேவாக் ஓய்வில் இருக்கிறார். சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ரகானே, காம்பீர் ஆகியோர் நீடிக்கின்றனர். தொடக்க வீரர்களாக காம்பீருடன் ரகானே களம் இறங்கக் கூடும். பந்துவீச்சில் வினய்குமாருக்குப் பதில் அபிமன்யூமிதுன் இடம்பிடித்திருக்கிறார்.
இங்கிலாந்து அணியில் மார்கன் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். அந்த அணியில் ரைட், லம்ப் போன்ற வீரர்கள் இருக்கின்றனர்.
20 ஓவர் போட்டியிலாவது வென்று ஆறுதல் அடைய வேண்டிய நிலையில் இருக்கிறது இந்திய அணி!










