புனே: டெஸ்ட் அணி, டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு தனித்தனியே கேப்டன்களை நியமிப்பது குறித்து கருத்து தெரிவிக்க இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி மறுத்துவிட்டார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் போட்டித் தொடரை வென்றது. இந்தியாவின் மோசமான ஆட்டமே இந்த தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியா தொடர்ந்து 3 டெஸ்ட் தொடர்களில் தோல்வி அடைந்துள்ளது. இதற்கிடையே டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து டோணியை நீக்க நினைத்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அமர்நாத் தெரிவித்தார்.
இதையடுத்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் டோணியை டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நீக்குமாறு குரல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் டோணியிடம் டெஸ்ட் போட்டி, டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு தனித் தனி கேப்டன் போடுவது குறித்து கேட்டதற்கு,
தனித்தனி கேப்டன் போடுவது குறித்து எனது கருத்தை கேட்டது நல்லது. ஆனால் நாளை டி20 போட்டிகள் துவங்குவதால் நாம் அதைப் பற்றி மட்டும் பேசுவோம். இந்திய கிரிக்கெட்டை பொறுத்த வரை போட்டிகள் ஒழுங்காக போகவில்லை என்றால் உடனே கேப்டன் பதவி, மூத்த வீரர்கள், இளைய வீரர்கள், திறமை, பலம் குறித்து எல்லாம் கேள்வி எழுப்புவார்கள். அதனால் ஒவ்வொன்றுக்கும் பதில் அளிக்க நேரம் இல்லை என்று நினைக்கிறேன் என்றார்.










