ஐபிஎல் டி20 சீசன் 6 போட்டி ஏப்ரல் 3ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகின்றன. முதல்நாள் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி டேர் டெவில்ஸ் அணியும் மோதுகின்றன.
இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்ததை அடுத்து தொடங்கப்பட்டதுதான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளன. 6 வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் துவக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன.
அதனைத் தொடர்ந்து 2 மாதங்கள் வரை பல்வேறு பகுதிகளில் உள்ள மைதானங்களில் தொடர்ந்து போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு மொத்தம் 9 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. ஐதராபாத் சன்ரைசஸ் அணி முதல் முறையாக ஐ.பி.எல். களத்தில் இறங்குகிறது. இந்த அணி ஏப்ரல் 5-ம் தேதி தனது முதல் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது.
கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 8 முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறும். அதன்பின்னர் முதல் தகுதிச்சுற்று மற்றும் வெளியேற்றும் ஆட்டம் முறையே மே 21 மற்றும் மே 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
2-ம் தகுதிச்சுற்று மற்றும் இறுதிப்போட்டி முறையே மே 24 மற்றும் 26-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.










