மும்பை: இந்தியா- இங்கிலாந்து இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றியைப் பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி நடத்தப்பட்டது. முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. தொடக்க வீரர் ரகானே 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் காம்பிருடன் இணைந்த கோலி, பந்துகளை வெளுத்து வாங்க ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.
கடந்த போட்டியில் அதிரடி காட்டிய யுவராஜ்சிங், 4 ரன்களிலும், காம்பிர் 17 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். இந்தியா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது,.
பின் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, இந்திய அணியின் பந்துகளை துவம்சம் செய்தனர். விறுவிறுப்பான இந்த போட்டியின் கடைசி ஓவர் த்ரில்லாக இருந்தது. கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றி பெற 9 ரன்கள் தேவை இருந்தது. ஆனால் கடைசி ஓவரின் 5 பந்துகளில் இங்கிலாந்து அணியால் 6 ரன்களே எடுக்க முடிந்தது. கடைசி பந்தில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் மோர்கன் கடைசிபந்தை சிக்சருக்கு விளாச இங்கிலாந்து அணி 181 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இதனால் இந்தத் தொடர் 1-1 என்ற விதத்தில் சமன் ஆனது.










