பெங்களூர்: பெங்களூரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறது. கடந்த 2007-ம் ஆண்டு இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி வந்திருந்தது. அதன் பின்னர் 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவம் நடைபெற்றதால் இரு நாட்டு அணிகளிடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெறவில்லை. தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு இருநாட்டு அணிகளிடையே மீண்டும் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. 20 ஓவர் போட்டிகள் 2-ம் ஒருநாள் போட்டிகள் 3-ம் நடைபெற உள்ளது.
பெங்களூரில் இன்று முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் இந்திய அணி களம் இறங்குகிறது. அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் யுவராஜ்சிங் கலக்கியிருந்தார். அசோக் திண்டாவும் அசத்தியிருந்தார். கோஹ்லி, டோணி, ரெய்னா, ரஹானே ஆகியோரை நம்பி இந்தியா இன்று களமிறங்குகிறது.
பாகிஸ்தான் அணியில் கேப்டன் முகமது ஹபீஸ், கம்ரன் அக்மல், உமர் அக்மல், அப்ரிடி, உமர்குல் என அதிரடி வீரர்கள் இருக்கின்றனர். இன்றைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.










