கொல்கத்தா: பாகிஸ்தான் அணியுடனான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி படுகேவலமாக விளையாடி 85 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது.
இந்தியா வருகை தந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் சென்னையில் முதல் ஒருநா போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் வென்றால்தான் தொடரை வெல்லும் வாய்ப்பு கிடைக்கு என்பதால் இந்தியாவுக்கு இது வாழ்வா-சாவா? மோதலாக அமைந்துள்ளது. இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்குப் பதில் ஜடேஜா சேர்க்கப்பட்டார்.
இந்த போட்டி பகல்-இரவு ஆட்டமாக இருந்தாலும் பகல் 12 மணிக்கே ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பாகிஸ்தானை பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து களம் இறங்கிய பாகிஸ்தானின் தொடக்க வீரர்களான ஜாம்ஷெட், ஹபீஸ் இருவரும் நிலைத்து நின்று ரன்களை விறுவிறுவென குவித்தனர். 141 ரன்களை பாகிஸ்தான் அணி எடுத்திருந்த நிலையில் 23.5வது ஓவரில் ஜடேஜா பந்தில் ஹபீஸ் போல்டு ஆகி வெளியேறினார். மொத்தம் 74 பந்துகளை சந்தித்த ஹபீஸ் 76 ரன்களை எடுத்திருந்தார். அவருக்குப் பின் களம் இறங்கிய அஸார் அலி 2 ரன்களை மட்டும் எடுத்து ரன் அவுட் ஆனார். அப்போது பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 145 ரன்களாக இருந்தது. பாகிஸ்தானின் ஸ்கோர் 177 ஆக இருந்த போது யூனுஸ்கான் அவுட் ஆகி வெளியேறினார்.
தொடக்க வீரரான ஜாம்ஷெட்டுடன் கேப்டன் மிஸ்பா உல் ஹக் இணைந்தார். அவர் நீண்டநேரம் நிற்கவில்லை. அதன் பின்னர் சோயிப் மாலிக்கும் ஜாம்ஷெத்துடன் இணைந்து ஆடினார். ஜாம்ஷெட் சதமடித்தார். 41.1வது ஓவரில் பாகிஸ்தான் 210 ரன்கள் எடுத்த நிலையில் ஜாம்ஷெட் அவுட் ஆனார். அப்போது அவர் எடுத்த ரன்கள் 106. அதன் பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. 48.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான். இந்தியாவின் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் ஷர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
வெற்றி பெற 251 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஆனால் வழக்கம் போல இந்திய வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். 42 ரன்களை இந்திய அணி எடுத்த போது காம்பீர் அவுட் ஆனார் 55,59- வது ரன்களில் கோஹ்லியும் சேவாக்கும் அவுட் ஆகினர். பின்னர் வந்த யுவராஜ் சிங், ரெய்னா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். பின்வரிசையில் அஸ்வினும் நிலைத்து நிற்கவில்லை. எப்படியாவது இந்திய அணியின் கேப்டன் காப்பாற்றிவிடமாட்டாரா? என்ற ரசிகர்களின் 'அற்ப' நம்பிக்கை எழுந்தது. ஆனால் ஜடேஜா 13 ரன்களிலும் புவனேஷ்வரும் திண்டாவும் அடுத்தடுத்து டக் அவுட்டும் ஆகி அந்த நம்பிக்கைக்கு செம வேட்டு வைத்தனர். 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களுடன் பரிதாமாக தோல்வி முகத்தில் தடுமாறிக் கொண்டிருந்தது இந்திய அணி. அப்போது கேடன் டோணி 30 ரன்களைத்தான் தொட்டிருந்தார்.
இருப்பினும் இந்திய அணியால் வெற்றி இலக்கான 251 ஐ எட்ட முடியாமல் 48 வது ஓவரில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது! மொத்தம் 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது. இந்திய அணியின் கேப்டன் டோணி அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்திருந்தார்.
பாகிஸ்தானின் அஜ்மல் குறைவான ரன்கள் கொடுத்து 3 இந்திய விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். புவனேஷ்வரையும் திண்டாவையும் டக் அவுட் ஆக்கியதும் அஜ்மலின் பந்துதான்!
சென்னையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.











