பெங்களூர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து வீரேந்திர ஷேவாக் நீக்கப்பட்டுள்ளார். அதற்குப் பதில் சட்டேஸ்வர் புஜாரா சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீப காலமாக வீரேந்திர ஷேவாக் பார்மிலேயே இல்லை. சமீபத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இவர் ஒரு போட்டியில் கூட ஜொலிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் சோபிக்காததாலும், மற்ற வீரர்கள் சரியாக ஆடாததாலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் இந்தியா இழந்தது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. இரு அணிகளும் ஒரு நாள் போட்டிகளில் ஆடவுள்ளன. இதில் முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியே இங்கிலாந்து தொடருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது - ஒரே ஒரு மாற்றத்துடன். வீரேந்திர ஷேவாக் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் சட்டேஸ்வர் புஜாரா சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வருடத்தில் 11 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள ஷேவாக் வெறும் 22.54 என்ற சராசரியுடன் உள்ளார். அதேசமயம், புஜாரா நல்ல பார்மில் உள்ளார். கடந்த ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அவர் 58.53 என்ற சராசரியுடன் உள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டிலும், 2வது போட்டி கொச்சியிலும், 3வது போட்டி ராஞ்சியிலும் முறையே ஜனவரி 11, 15, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்திய அணி விவரம்
டோணி, கெளதம் கம்பீர், அஜிங்கியா ரஹானே, சட்டேஸ்வர் புஜாரா, விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், அமீத் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், அசோக் திண்டா, ஷமி அகமது.










