சென்னை: இந்தியா வருகை தரும் ஆஸ்திரேலியா அணியுடனான போட்டிகள் குறித்த அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 22-ந் தேதி நடைபெற இருக்கிறது
இங்கிலாந்து கிரிக்கெட் அணியைத் தொடர்ந்து இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா அணி வருகை தருகிறது. அந்த அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிகளுக்கான அட்டவணை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது பிப்ரவரி 22-ந் தேதி டெல்லியிலும் மார்ச் 2-ந் தேதி மொகாலியிலும் மார்ச் 14- ஹைதராபாத்திலும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 22-ந் தேதியும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அட்டவணையை மாற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது. அதாவது போட்டி நடைபெறும் இடங்களை மட்டுமே மாற்றியமைத்திருக்கிறது கிரிக்கெட் வாரியம். டெல்லியில் நடைபெற இருந்த முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 22-ந் தேதி நடைபெற உள்ளது. 2-வது டெஸ்ட் ஹைதராபாத்திலும், 3-வது டெஸ்ட் மொகாலியிலும், 4-வது டெஸ்ட் டெல்லியிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.










