மொஹாலி: இந்தியாவுக்கு எதிரான 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்று மிகவும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்களைக் குவித்துள்ளது.
ரன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்தியா திணறியது.
மொஹாலியில் இன்று பிற்பகல் தொடங்கிய 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. இதையடுத்து முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார் கேப்டன் டோணி. இதையடுத்து இங்கிலாந்து ஆடத் தொடங்கியது.
இயான் பெல் 10 ரன்களில் ஆட்டமிழந்து விட்டாலும், தொடக்க ஆட்டக்காரரான அலிஸ்டைர் குக்கும், கெவின் பீட்டர்சனும் சேர்ந்து சரிவைத் தடுத்து மிக மிக நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர்.
குக்கும் பீட்டர்சனும் தலா 76 ரன்கள் எடுத்தனர். ஜே.இ.ரூட் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் எடுத்தார்.
30 ஓவர்கள் இறுதியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்தது. அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்த முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர்.
புவனேஸ்வர் சிங் 10 ஓவர்கள் போட்டு 30 ரன்கள் கொடுத்தார். ஆனால் ஷாமி அகமத் 8 ஓவர்களில் 58 ரன்களை அள்ளித் தந்தார். அஸ்வின் 10 ஓவர்களில் 58 ரன்களைத் தந்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
ஜடேஜா 10 ஓவர்களில் 39 ரன்களைத் தந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா 47 ரன்களைத் தந்து 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
முன்னதாக இந்திய அணியில் அஜிங்கியா ரஹானே நீக்கப்பட்டு ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டார். வேறு மாற்றம் ஏதும் இல்லை. அதேபோல இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்டர் சேர்க்கப்பட்டு, கீஸ்வெட்டர் நீக்கப்பட்டிருந்தார்.










