மொஹாலி: இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரையும் வென்றது. ரோஹித் சர்மாவும், சுரேஷ் ரெய்னாவும் இணைந்து இந்தியாவுக்கு வெற்றி தேடிக் கொடுத்தனர்.
மொஹாலியில் நேற்று நடந்த 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் இங்கிலாந்தை பேட் செய்யப் பணித்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 257 ரன்களை எடுத்தது.
இந்தியத் தரப்பில் ஆரம்பத்தில் பந்து வீச்சில் சுணக்கம் காணப்பட்டது. இதனால் விக்கெட் விழாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் பின்னர் இந்தியப் பந்து வீச்சாளர்கள் சுதாரித்துக் கொண்டதால் இங்கிலாந்து பெரிய ஸ்கோரை எடுக்க முடியாமல் தடுக்க முடிந்தது.
அதன் பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்திய அணியில் அஜிங்கியா ரஹானே நீக்கப்பட்டு அவருக்குப் பதில் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டிருந்தார். அவரும் கம்பீரும் ஆட்டத்தைத் தொடங்கினர். இதில் கம்பீர் 10 ரன்களுடன் வெளியேறினார்.ஆனால் மறுபக்கம் ரோஹித் சர்மா ரன் குவிப்பில் குதித்தார்.
சிறப்பாக ஆடிய அவர் 83 ரன்களைக் குவித்து விட்டுத்தான் ஓய்ந்தார். படு நேர்த்தியாக அவர் ஆடியதால் இந்திய அணிக்குப் பெரும் சிரமம் குறைந்தது. இருப்பினும் விராத் கோஹ்லி சொற்ப ரன்களில் வீழ்ந்தார். யுவராஜ் சிங்கும் கை கொடுக்கத் தவறினார். ஆனால் சுரேஷ் ரெய்னா விஸ்வரூப ஆட்டத்தை நேற்று காட்டினார்.
அபாரமாக ஆடிய அவர் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறி போய் விடாமல் தடுத்து பத்திரப்படுத்தி இந்தியாவை கரை சேர்க்க உதவினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய ரெய்னா 89 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். வெற்றிக்குத் தேவையான ரன்னை ரவீந்திர ஜடேஜா 47.3வது ஓவரில் எடுத்து இந்தியாவுக்கு தொடர் வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.
5 விக்கெட்களை மட்டுமே இழந்து இந்தியா வெற்றியை தொட்டது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.
ஆட்ட நாயகனாக சுரேஷ் ரெய்னா தேர்ந்தெடுக்கப்பட்டார்.










