தர்மசாலா: கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான வெற்றியைப் பெற்று கவுரமாக ஒருநாள் தொடரை முடித்தது. இயான் பெல் சிறப்பான சதம் போட்டு இந்திய அணியின் வெற்றியைத் தடுத்து விட்டார்.
இங்கிலாந்து அணியுடன் 4 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஒரு போட்டியில்தான் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது. இதர 3 போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ச்சியாக வென்று தொடரைக் கைப்பற்றியது. இதனால் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னணியைப் பெற்றது.
இந்நிலையில் இன்று காலை ஹிமாச்சல் பிரதேசம் தர்மசாலாவில் கடுமையான குளிருக்கு மத்தியில் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.
இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே ரன்களை எடுக்க பெரிதும் சிரமப்பட்டனர். 3.3வது ஒவரில் ரோஹித் ஷர்மா அவுட் ஆக இந்திய அணி 13ரன்களைத்தான் எடுத்திருந்தது.
முதல் கோணல் முற்றும் கோணல் என்பதைப் போல அடுத்த பந்திலேயே விராத் கோஹ்லி அவுட் ஆனார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. கோஹ்லியைப் போல யுவராஜ்சிங்கும் சிறிது நேரமே நின்று டக் அவுட் ஆகி வெளியேறினார்.
பின்னர் காம்பீர் 24 ரன்களை எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். 13 ஓவரில் 4 விக்கெட் இழப்பின் போது இந்திய அணி 49 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. இந்திய அணி தொடர்ந்து ரன்களை எடுக்க தடுமாறியது. ஆனால் ரெய்னாவின் அதிரடியான ஆட்டம் இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றியது. அவர் அதிரடியாக ஆடி வந்தார். கேப்டன் டோணியோ 23 பந்துகளில் 15 ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆனார். ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜாவும் அதிரடியாக ஆடினர். ரெய்னா மற்றும் ஜடேஜாவின் ஆட்டத்தால் இந்திய ரசிகர்கள் சற்றே பெருமூச்சுவிட முடிந்தது.
இந்திய அணி 79- ரன்களை எடுத்த போது 21.1-வது ஓவரில் கேப்டன் டோணி அவுட் ஆனார். ஆனால் ஜடேஜாவும் ரெய்னாவும் அதிரடியாக ஆடியதால் தப்பியது இந்தியா. 38.4-வது ஓவரில் இந்திய அணியை 157 ரன்களுக்கு கொண்டுவந்துவிட்ட கையோடு ஜடேஜா அவுட் ஆனார். 65 பந்துகளில் 39 ரன்களை அவர் எடுத்திருந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே 41.4வது ஓவரில் ரெய்னாவும் அவுட் ஆனார். 98 பந்துகளில் 83 ரன்களை அவர் எடுத்திருந்தார்.
49.4-வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 226 ரன்களை எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற்றி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலிருந்தே நிதானமாக சேஸ் செய்தது. அலிஸ்டைர் குக்கும், இயான் பெல்லும் நிதானமாக ரன் குவித்தனர். அவர்களில் பெல் மிகப் பொறுப்பாக ஆடினார். இவரது அபாரமான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை நோக்கி நிதானமாகவும், சீராகவும் நடை போட்டது.
குக், கெவின் பீட்டர்சன், ரூட் என வீரர்கள் ஒருபக்கம் விழுந்தாலும் பெல் நிலைத்து நின்று ஆடியதால் வெற்றி இங்கிலாந்தை விட்டு எந்த நிமிடத்திலும் நழுவிப் போகவில்லை. சிறப்பாக ஆடிய பெல், சதம் போட்டார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய அவர் 113 ரன்களைக் குவித்தார். அவருக்குத் துணையாக களம் நின்ற இயான் மோர்கன் 40 ரன்களைக் குவித்தார்.
இந்த வெற்றியின் மூலம் 2-3 என்ற கணக்கில் சற்றே கவுரமாக தொடரை முடித்துள்ளது இங்கிலாந்து. இந்தியா ஏற்கனவே தொடரை வென்று விட்டது.










