டெல்லி: டிஎல்எப் நிறுவனத்தைத் தொடர்ந்து தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் ஐபிஎல் விளம்பரதாரர் பட்டியலிலிருந்து விலகியுள்ளது.
2007ம் ஆண்டு முதல் ஐபிஎல் விளம்பரதாரர்களில் ஒன்றாக ஹீரோ இருந்து வந்தது. அந்த ஆண்டில் இந்த நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் 22.5 மில்லியன் டாலர் அளவுக்கு ஒப்பந்தம் செய்திருந்தது ஹீரோ. ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் இது.கடந்த ஆண்டுடன் இது முடிவடைந்தது. தற்போது விளம்பரத்தை மேலும் நீட்டிக்கவில்லை ஹீரோ. மாறாக விலகிக் கொண்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் முதல் 3 ஆண்டுகள் ஹீரோ நிறுவனம் டெல்லி டேர்டெவில்ஸுடன் இணைந்திருந்தது. பின்னர் கடைசி 2 ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸுடன் ஸ்பான்சராக இருந்தது.
இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடநத் 20 வருடங்களாக நாங்கள் கிரிக்கெட்டுடன் இணைந்திருக்கிறோம். எனவே நாங்கள் தற்போது கிரிக்கெட்டை விட்டு விலகுவதாக கூறமுடியாது. ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து மட்டுமே விலகுகிறோம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
ஐபிஎல்லுடனான ஸ்பான்சர்ஷிப்பை ஹீரோ மோட்டோகார்ப் விலக்கிக் கொண்டுள்ள நிலையில், இந்த நிறுவனம் இந்திய ஹாக்கி சம்மேளனத்துடன் புதிய நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தைமேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.










