டெல்லி: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் முதலாவது ஜம்மு காஷ்மீர் வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் பர்வேஸ் ரசூல். இவரை புனே வாரியர்ஸ் அணி ரூ20 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 நாள் பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்காக விளையாடிய பர்வேஸ் ரசூல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். பேட்டிங்கிலும் 36 ரன்கள் எடுத்திருந்தார். ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் பர்வேஸ் ரசூலின் அபார பந்து வீச்சு ஐ.பி.எல். அணிகளை அவர் பக்கம் ஈர்த்தது.
இது தொடர்பாக பர்வேஸ் ரசூல் கூறுகையில், புனே வாரியர்ஸ் அணி என்னை முதலில் தொடர்பு கொண்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கு முன்பாக அவர்கள் என்னிடம் பேசினார்கள். முதலில் அழைத்ததன் அடிப்படையில் புனே அணியுடன் இணைய முடிவு செய்தேன். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட போகும் முதல் கிரிக்கெட் வீரர் நான் தான் என்றார்.
ஐ.பி.எல். போட்டிக்காக இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் மட்டுமே ஏலம் மூலம் விற்கப்படுகின்றனர். ரசூல் முதல்நிலை கிரிக்கெட் வீரர் என்பதால் நேரடியாக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்ற விதியின் அடிப்படையில் புனே அணி ஒப்பந்தம் செய்துள்ளது.










